திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படமான ‛ஜனநாயகன்' தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் வெளியாகாமல் இருந்த சூழலில் நேற்று முழு படமும் லீக் ஆகி அதிர்ச்சியை அளித்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த படம் லீக் ஆனது தொடர்பாக திரையுலகை சேர்ந்த பலரும் குரல் கொடுத்துள்ளனர். படத்தில் நடித்த நாயகி பூஜா ஹெக்டே கூட ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டார். ஆனால் படத்தின் ஹீரோவான விஜய் இதுவரை வாய் திறக்கவே இல்லை.
இந்நிலையில் ஜனநாயகனின் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த மமிதா பைஜூ வெளியிட்ட அறிக்கை : ‛‛அன்புள்ள ரசிகர்களுக்கு... ஒரு திரைப்படம் உருவாவதற்கு பின்னால், ஒவ்வொரு நாளும் தங்களின் முழு உழைப்பையும் வழங்கும் எண்ணற்ற கலைஞர்களின் கடின உழைப்பும், ஆர்வமும், அர்ப்பணிப்பும் உள்ளது.
திரைப்படம் சட்டவிரோதமாகப் பகிரப்படுவதைக் காண்பது உண்மையில் வருத்தமளிக்கிறது. சில தருணங்கள் அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தின்படி, பெரிய திரையில் (திரையரங்கில்) அனைவருடனும் இணைந்து அனுபவிக்கப்பட வேண்டியவை. திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் போது அதை சரியான முறையில் கண்டு மகிழ்வோம். தயவுசெய்து திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள். சினிமாவையும், அதன் பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் பாதுகாக்க அதுவே ஒரே வழி'' என தெரிவித்துள்ளார்.