'மோலிவுட் டைம்ஸ்' படத்தில் மீண்டும் அசத்துவார்களா பிரேமலு பிரண்ட்ஸ்?
கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' திரைப்படம் மலையாளத்தையும் தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த படத்தில் நடித்த மமிதா பைஜூ தமிழில் முன்னணி கதாநாயகி வரிசைக்கு உயர்ந்து வருகிறார். அதேசமயம் அந்த படத்தில் நாயகனும் அவரது நண்பருமாக நடித்த நஸ்லென் மற்றும் சங்கீத் பிரதாப் இருவருமே கூட காமெடியில் கலக்கியிருந்தனர்.
அந்த வகையில் இவர்கள் கூட்டணி மீண்டும் 'மோலிவுட் டைம்ஸ்' என்கிற படத்திற்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. வரும் ஜூன் 5ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தை அபினவ் சுந்தர் நாயக் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே வினித் சீனிவாசன் நடிப்பில் மருத்துவமனையில் நடக்கும் இன்சூரன்ஸ் மோசடியை மையப்படுத்தி உருவாகி வரவேற்பை பெற்ற முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் படத்தை இயக்கியவர்.
இந்த மோலிவுட் டைம்ஸ் படம் சினிமாவுக்குள் நடக்கும் சினிமாவைப் பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது. இந்த படத்திலும் நஸ்லென் மற்றும் சங்கீத் பிரதாப் இருவரும் கலக்கி இருக்கிறார்கள் என இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது