பிளாஷ்பேக்: திரையரங்கை விட்டு எடுக்க மறுத்த இயக்குநர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணனின் திரைப்படம்
1960 மற்றும் 70களில் தமிழ் திரையுலகில் கோலோச்சியிருந்த இயக்குனர்களான ஸ்ரீதர், ஏ பீம்சிங், ப நீலகண்டன், கே சங்கர், ஏ பி நாகராஜன் போன்ற இயக்குனர்களுக்கு மத்தியில், ஒரு தனிப்பாதை வகுத்து, தரமான குடும்பக் கதைகளைத் தந்ததன் மூலம், தனித்து பார்க்கப்பட்ட ஒரு இயக்குநராக உயர்ந்திருந்தவர்தான் இயக்குநர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன். ஒரு பாடலாசிரியராக திரையுலகில் நுழைந்து, பின் வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்து ஒரு வசனகர்த்தாவாக அடையாளம் காணப்பட்டு, அதன்பின் “சாரதா” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ஒரு இயக்குநராக உயர்வு பெற்றவர் இவர்.
கதைக்கு முக்கியத்துவம் தந்து, அந்தக் கதைக்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, தனது அற்புதமான வசனங்களால் பார்வையாளர்களை பெருமளவில் ஈர்த்து, குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்த இந்த இயக்குநரின் படைப்பில் உருவான ஒரு திரைப்படம்தான் “பணமா பாசமா”.
பொதுவாகவே பணக்காரர்களை ஏளனம் செய்து, எடுக்கப்பட்ட கதைகள் எல்லாமே எல்லாக் காலங்களிலும் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு, வெற்றிகரமாக ஓடி, படம் எடுத்தவர்களை பணக்காரர்களாக்கியிருக்கின்றது. அந்தவகையில் இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனின் இந்த “பணமா பாசமா” திரைப்படமும் வெற்றிகரமாக ஓடி, வசூலை வாரிக் கொடுத்திருக்கின்றது. திரையிட்ட இடங்களில் எல்லாம் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் என வர்ணிக்கப்படும் மதுரை தங்கம் திரையரங்கில் இத்திரைப்படம் 140 நாள்கள் வரை ஓடி, பெரும் சாதனை வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.
“பணமா பாசமா” திரைப்படத்தை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? என படத்தின் இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனே திரையரங்க உரிமையாளர்களைப் பார்த்து ஒருமுறை கேட்க, 'அடுத்த திரைப்படத்தை எடுத்துத் தாருங்கள் அதுவரை இந்த திரைப்படத்தையே ஓட்டிக் கொண்டிருக்கின்றோம், நல்ல வசூலாகிறது' என திரையரங்க உரிமையாளர்கள் சொல்லும் அளவிற்கு ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருந்ததோடு, இயக்குநர் கே எஸ் கோபலகிருஷ்ணன் அதுவரை எடுத்திருந்த திரைப்படங்களில் இத்திரைப்படமே மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாகவும் அமைந்திருந்தது.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகை விஜய நிர்மலா நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வாகி இருந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. நடிகர்கள் ஜெமினிகணேசன், சரோஜாதேவி, டி கே பகவதி, எஸ் வரலக்ஷ்மி, நாகேஷ், விஜய நிர்மலா, கே கண்ணன், கே சாரங்கபாணி ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தின் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, இசையமைத்திருந்தவர் 'திரையிசைத் திலகம்' கே வி மகாதேவன். குறிப்பாக படத்தில் இடம் பெற்ற “எலந்தப்பழம்” பாடல், அதன் வரிகளுக்காகவும், வார்த்தைகளுக்காகவும் விமர்சனத்துக்குள்ளாகி, ஒரு சர்ச்சைக்குரிய பாடலாகவும் அப்போது பேசப்பட்டது.
1968ம் ஆண்டு வெளிவந்த “பணமா பாசமா” திரைப்படத்தின் கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு, படத்தின் வசனம், திரைக்கதை அமைப்பு, இசை, இயக்கம் என எல்லாம் சரி விகிதத்தில் கலந்து, பெரியவர் முதல் சிறியவர் வரை அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வண்ணம் இயக்குநர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணனால் உருவாக்கப்பட்டிருந்த விதம், காலங்கள் கடந்தும் இன்றும் குடும்பங்கள் கொண்டாடி மகிழும் ஓர் காவியப் படைப்பாக இருக்கின்றது என்றால் அது மிகையன்று.