பிளாஷ்பேக்: வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் “நவயுவன்”
தென்னிந்தியத் திரைப்பட வரலாற்றில், பல சாதனைகளுக்கும் சரித்திர நிகழ்வுகளுக்கும் முதன்மையானதாக விளங்குவது நம் தமிழ் திரைப்பட உலகம் என்றால் அது மிகையன்று. 1931ம் ஆண்டு தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான “காளிதாஸ்” தொடங்கி, இன்றுவரை காலத்திற்கேற்றவாறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பல அரிய சாதனைகளையும், புதுப்புது உத்திகளையும் கையாண்டு புதுமை படைத்து வரும் நம் தமிழ் திரைப்பட உலகம் முதன் முதலாக வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தி, எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாக வெளிவந்ததுதான் “நவயுவன்” என்ற திரைப்படம்.
வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையோடு 1937ம் ஆண்டு வெளிவந்த “நவயுவன்” திரைப்படம், லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். தமிழில் “சகுந்தலை”, “மீரா”, “சதிலீலாவதி” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்க இயக்குநரான எல்லீஸ் ஆர் டங்கன் அவர்களின் நெருங்கிய நண்பரான மைக்கேல் ஓர்மலோவ் என்பவர்தான் இந்த “நவயுவன்” திரைப்படத்தை இயக்கியவர். இவ்விருவரும் அமெரிக்காவிலுள்ள சவுத் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தவர்கள். லண்டனில் மன்னர் ஆறாம் ஜார்ஜ் முடிசூட்டு விழா நடைபெற்ற இடத்தில் கூட இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத் தகுந்த ஒன்று.
இதற்கிடையே லண்டனில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக படத்தின் இயக்குநரான மைக்கேல் ஓர்மலோவ் எங்கோ சென்றுவிட, படத்தின் தயாரிப்பு தரப்பினரோ ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸிடம் புகார் ஒன்றை கொடுக்க, பின்னர் இயக்குநர் மைக்கேல் ஓர்மலோவ் நோய்வாய்ப்பட்டிருந்த தனது தாயைப் பார்க்க சென்றிருந்தது தெரியவர, அதன்பின் மீதி படப்பிடிப்பு முழுவதும் படக்குழுவினரால் சென்னையில் எடுக்கப்பட்டு, படம் வெளியிடப்பட்டது. அடிப்படையில் ஒரு கர்நாடக இசைக்கலைஞரான வீரவநல்லூர் வேதாந்தம் சடகோபன் என்ற இயற்பெயரைக் கொண்ட வி வி சடகோபன், நாயகனாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படமே இந்த “நவயுவன்” திரைப்படம்தான். இதன் பின் மூன்று திரைப்படங்கள் வரை நடித்திருந்த வி வி சடகோபன் மீண்டும் கர்நாடக இசைத்துறைக்கே திரும்பிச் சென்றிருக்கின்றார்.
இத்திரைப்படத்தின் இயக்குநர் மைக்கேல் ஓர்மலோவ், திரைப்படத்துiறியில் இருந்து விலகி, பின்னாளில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் அமைந்துள்ள தொழில் நகரமான டெட்ராய்ட்டில் உள்ள போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகைப்படத் துறையில் தலைமைப் பொறுப்பேற்று பணிபுரிந்துமிருக்கின்றார். வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்ற இந்த “நவயுவன்” திரைப்படம், 1937ம் ஆண்டு ஜுன் 10 அன்று வெளிவந்து நல்ல வெற்றியையும் பெற்றுத் தந்தது.