இளையராஜாவின் பத்து.... தமிழ் திரை இசையின் முத்து...
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இசை சொத்து இசையமைப்பாளர் இளையராஜா. மனித உணவுர்களுடன் நேரடியாக பேசும் தன்மை வாய்ந்தது அவரது இசை. கிராமிய இசை, மேற்கத்திய கிளாசிக், கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை.... என அனைத்து விதமான இசைகளையும் சினிமா பாடல்களில் பயன்படுத்தி உயிரோட்டம் தந்தவர் இளையராஜா. கேட்பவரின் மனதை வருடும் மந்திர வித்தையை அவரது இசை தந்தது என்றால் மிகையல்ல.
இளையராஜா இசையமைக்காத நடிகர்களே இல்லை எனும் அளவிற்கு தமிழ் சினிமாவில் அவர் பல நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். டாப் ஸ்டாராக இருந்தாலும் சரி, அறிமுக நடிகர்களாக இருந்தாலும் சரி யாருக்கும் பாரபட்சமின்றி படங்களுக்கு இசையமைத்து தந்துள்ளார். அவரை பொருத்தமட்டில் ஸ்டார் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என பார்ப்பதில்லை படத்தின் கதையை மட்டுமே பார்ப்பார். அதை உள்வாங்கி கொண்டு பாடல்களை தருவார். அவரது இசைக்காகவே ஓடிய படங்கள் ஏராளம். அவரது இசையில் தலைமுறை கடந்து இன்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள சிறந்த 10 ஆல்பங்களை இங்கே பார்க்கலாம். இந்த 10 படங்கள் என்பது பாடல்கள் ஹிட் என்பதை தாண்டி அவரது இசை இந்த படங்களில் எப்படியொரு தாக்கத்தை தந்தது என்பதை எடுத்துரைக்கும் விதமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
உதிரிப்பூக்கள் (1979)
நடிப்பு : விஜயன், அஸ்வினி, சாருஹாசன், சரத் பாபு
இயக்கம் : மகேந்திரன்
இசை : இளையராஜா
இந்த படத்தின் கதையே ஒரு ஹெவி சப்ஜெக்ட். புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, கிராமத்துப் பின்னணியில் மனித உணர்வுகளை மிக ஆழமாகப் பேசிய படம். தகப்பனால் பழிவாங்கப்பட்ட தாயால் வளர்க்கப்படும் குழந்தைகள் ஒருகட்டத்தில் தாயையும் இழக்கிறார்கள். பார்வையாளர்களை கனத்த இதயத்துடன் பார்க்க வைத்த இந்த படத்திற்கு இசையால் உயிர் தந்தார் இளையராஜா. பாடல்களை தாண்டி பின்னணி இசை ரசிகர்களை படத்துடன் கட்டி போட்டது.
பாடல்கள் : அழகிய கண்ணே உறவுகள் நீயே..., நான் பாட நீ ஆட நெஞ்சே கொண்டாட்டம்..., கல்யாணம் பாரு கொண்டாட்டம் பாரு..., போடா போடா புண்ணாக்கு..., ஏ இந்த பூங்காத்து தாலாட்டுது...
மூடுபனி (1980)
நடிப்பு : பிரதாப் போத்தன், ஷோபா, விஸ்வநாதன், காந்திமதி
இயக்கம் : பாலு மகேந்திரா
இசை : இளையராஜா
இளையராஜாவின் 100வது படம் இது. இசையால் படத்தின் கதையை நகர்த்தி சென்றிருப்பார். பொதுவாக இந்த படத்தின் பாடல்களை தான் பலரும் பெரிதாக சொல்வார்கள். ஆனால் இந்த படத்தின் கிளைமாக்ஸில் மான்டேஜ் பாடலாக ஒலித்த ‛கண்ணே ராஜா...' என்ற பாடலின் மூலமாக படம் முழுவதும் வில்லனாக பார்க்கப்பட்ட பிரதாப் போத்தன் அதன்பின் ஹீரோவாக பார்க்கப்பட்ட பெருமை இளையராஜாவையே சேரும். அந்தளவுக்கு ஒரு உருக்கமான இசையை தந்திருப்பார் ராஜா.
பாடல்கள் : என் இனிய பொன் நிலாவே..., பருவ காலங்களின்..., சிங் சுவிங்..., ஆசை ராஜா...
காதல் ஓவியம் (1982)
நடிப்பு : கண்ணன் அருணாச்சலம், , ராதா, கவுண்டமணி, ராதாரவி
இயக்கம் : பாரதிராஜா
இசை : இளையராஜா
பாரதிராஜாவும், இளையராஜாவும் தென்கோடி இடங்களில் இருந்து வந்த ஒரு ஊர்க்காரர்கள்(தேனி மாவட்டம்). அன்றைய காலத்தில் இந்த இளைஞர்கள் இருவரும் இணைந்து ஒரு கர்நாடக சங்கீத பின்னணியில் ஒரு சூப்பர் ஹிட் பாடல்களை தந்தனர். சினிமா பாணியில் மெட் அமைக்காமல் கர்நாடக சங்கீத பின்னணியில் இசையமைத்த படம் இது. குறிப்பாக கர்நாடக சங்கீதம் முறையாக தெரியாத எஸ்பி பாலசுப்ரமணியத்தை, ‛சங்கீத ஜாதி முல்லை...' என்ற பாடலை பாட வைத்து அசத்தினார்.
பாடல்கள் : சங்கீத ஜாதி முல்லை..., அம்மா அழகே..., வெள்ளிச் சலங்கைகள்..., குயிலே குயிலே..., நாதங்கள் ஆடும் மேடையில்..., பாடுவாள் பாசக் கிளிகள்...
சலங்கை ஒலி (1983)
நடிகர்கள் : கமல்ஹாசன், ஜெயப்பிரதா, சரத் பாபு, எஸ். பி. சைலஜா, மனோரமா.
இயக்கம் : கே விஸ்வநாத்
இசை : இளையராஜா
தேனி, பண்ணைப்புரம் என்ற தென்கோடி கிராமத்தில் இருந்து வந்தவருக்கு கிராமிய இசை தெரிந்திருப்பது ஆச்சர்யமில்லை. ஆனால் சினிமாவிற்கு வந்த சில ஆண்டுகளில் கர்நாடக இசை கலைஞர்களே மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யப்படும் அளவிற்கு அந்த இசையை தந்து ஆச்சர்யப்படுத்தியவர் இளையராஜா. இந்த படம் பரதநாட்டியம் தொடர்பான கதை என்பதால் கர்நாடக இசையில் பாடல்களை சூப்பர் ஹிட்டாக தந்து வியக்க வைத்தார். பின்னணி இசையும் கதைக்கும், காட்சிக்கும் உயிரோட்டம் தந்தது.
பாடல்கள் : மவுனமான நேரம்... தகிட ததமி..., நாத வினோதங்கள்..., வான் போலே வண்ணம்..., நமச்சிவாயா..., வேதம் அணுவிலும், பால கனகமய...
வைதேகி காத்திருந்தாள் (1984)
நடிப்பு : விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, செந்தில், ராதாரவி
இயக்கம் : ஆர் சுந்தர் ராஜன்
இசை : இளையராஜா
ஆக் ஷன் ஹீரோவான விஜயகாந்தை ஒரு முழுமையான நடிகராக அவரை நிரூபித்த படம் வைதேகி காத்திருந்தாள். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் ஒரே படத்திற்கு தான் தருவேன் என உறுதியாக இருந்தார் இளையராஜா. அப்படி பலர் முயற்சித்தும் ஆர் சுந்தர்ராஜன் ஒருவர் மட்டுமே அதற்கான கதையை உருவாக்கி மொத்த பாடல்களையும் பயன்படுத்தி ஹிட்டாக்கினார். இந்த பட பாடல்கள் எந்தளவு ஹிட்டாச்சுனு தமிழக மக்களே அறிவர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தேனி, கம்பம் அருகே இரவு நேரங்களில் ஒரு தியேட்டரில் இந்த படத்தில் வரும் ‛ராசாத்தி உன்ன காணாத நெஞ்சம்...' பாடலை தியேட்டருக்கு பின்னால் யானைகூட்டம் கேட்டுவிட்டு நகர்ந்து செல்லுமாம். இந்த தகவலை இளையராஜாவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அந்தளவுக்கு மனிதர்களை தாண்டி மரம், செடி, கொடி, விலங்குகள் என இயற்கையும் இன்புறச் செய்ததது தான் இளையராஜாவின் இசை.
பாடல்கள் : ராசாத்தி உன்ன..., அழகு மலராட..., ராசாவே உன்ன..., மேகம் கருக்கயிலே..., இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..., காத்திருந்து காத்திருந்து...
சிப்பிக்குள் முத்து (1985)
நடிப்பு : கமல்ஹாசன், ராதிகா, கோலபுடி மாருதி ராவ், சோமயாஜுலு,
இயக்கம் : கே விஸ்வநாத்
இசை : இளையராஜா
‛சுவாதி முத்யம்' என்ற தெலுங்கு படம் தமிழில் ‛சிப்பிக்குள் முத்து' என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தின் பாடல்களும் கர்நாடக இசை பின்னணியில் வெளிவந்தன. குறிப்பாக ‛ராமன் கதை கேளுங்கள்...' பாடலை பாமரனனும் கேட்கும்படியாக கர்நாடக இசையில் தந்து ஆச்சர்யப்படுத்தினார் இளையராஜா.
பாடல்கள் : துள்ளி துள்ளி நீ பாடம்மா..., மனசு மயங்கும் மவுன கீதம்..., கண்ணோடு கண்ணான கண்கள்..., வரம் தந்த சாமிக்கு..., ராமன் கதை கேளுங்கள்..., தர்மம் சரணம் கச்சாமி.
சிந்து பைரவி (1985)
நடிப்பு : சிவகுமார், சுஹாசினி, சுலக்சனா, டெல்லி கணேஷ், ஜனகராஜ்
இயக்கம் : கே பாலசந்தர்
இசை : இளையராஜா
இளையராஜா - கே பாலசந்தர் கூட்டணியில் வெளியான முதல் படம். இதுவும் முழுக்க முழுக்க கர்நாடக பின்னணி இசையில் வெளியான படமாகும். கர்நாடக சங்கீத இசை நுணுக்கங்கள் இந்த படத்தின் பாடல்களில் அதிகம் இருக்கும். பாடறியேன் படிப்பறியேன் பாடலை போக் ஸ்டைலில் ஆரம்பித்து தியாகராஜ கீர்த்தனையில் வந்து முடித்து ஆச்சர்யப்படுத்தி இருப்பார் இளையராஜா. அதேப்போல தண்ணி தொட்டி தேடி வந்த பாடலை கேஜே யேசுதாஸை பாட வைத்து வியக்க வைத்தார்.
பாடல்கள் : பாடறியேன் படிப்பறியேன்..., நான் ஒரு சிந்து..., கலைவாணியே உனைத்தானே..., பூமாலை வாங்கி வந்தான்..., தண்ணித் தொட்டி தேடி வந்த..., மோகம் என்னும் தீயில்..., மரி மரி நின்னே..., மகா கணபதியும்..., மனதில் உறுதி வேண்டும்...
முதல் மரியாதை (1985)
நடிப்பு : சிவாஜி கணேசன், ராதா, காந்திமதி, ரஞ்சனி, தீபன், சத்யராஜ்...
இயக்கம் : பாரதிராஜா
இசை : இளையராஜா
தமிழ் சினிமாவில் மண்வாசனை மாறாத கிராமிய படைப்புகளின் மகுடமாக இத்திரைப்படம் இன்றும் போற்றப்படுகிறது. ஊருக்கு பெரியவரான சிவாஜிக்கு தன் மகள் வயது உடைய பெண் மீதான காதல் வருவது போன்ற கதை. இந்த படத்தின் இயக்கம், சிவாஜியின் நடிப்பை தாண்டி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது இளையராஜாவின் இசை என்றால் மிகையல்ல.
ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதை போன்று இந்த படத்தின் இசையை பற்றி சொல் வேண்டுமென்றால் நடிகை ரஞ்சனி இறப்பின் போது வரும் அந்த நீண்ட காட்சிகளுக்கு புல்லாங்குழல் வாத்தியம் மூலம் உயிர் கொடுத்திருப்பார் இளையராஜா. இப்படியொரு இசையை வேறு எந்த இசையமைப்பாளராலும் தர முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
பாடல்கள் : பூங்காற்று திரும்புமா..., அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்..., வெட்டிவேரு வாசம்..., ராசாவே உன்ன நம்பி..., பாட்டு சத்தம் கேட்கலயா..., ஏ குருவி...
கரகாட்டக்காரன் (1989)
நடிப்பு : ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில்
இயக்கம் : கங்கை அமரன்
இசை : இளையராஜா
இரண்டு கரகாட்டாக்கார கோஷ்டிகள் இடையேயான காதல் தான் படத்தின் ஒன் லைன் ஸ்டாரி. ஆனால் இந்த கதைக்கு பல விதமான மெட்டுகளில் அருமையான பாடல்களை தந்து படத்தை ஓராண்டு ஓட வைக்க முக்கிய காரணமாக அமைந்தது மட்டுமின்றி ராமராஜன் என்ற நடிகரை பட்டிதொட்டியெங்கும் அறிய செய்தவர் இளையராஜா. குறிப்பாக படத்தில் வரும் கவுண்டமணி - செந்தில் வரும் பிட் மியூசிக்கான பின்னணி இசைஒன்றை இளையராஜா தந்திருப்பார். அந்த இசையை கேட்டால் குழந்தை கூட இது கரகாட்டாக்காரன் படம் என சொல்லும் அளவுக்கு பேச வைத்தவர் இளையராஜா.
பாடல்கள் : மாங்குயிலே பூங்குயிலே..., இந்த மான் உந்தன்..., குடகு மலைக் காற்றில்..., மாரியம்மா.. மாரியம்மா..., முந்தி முந்தி வினாயகரே..., நந்த வனத்தில் ஒரு..., ஊரு விட்டு ஊரு வந்து..., பாட்டாலே புத்தி சொன்னான்...
தளபதி (1991)
நடிப்பு - ரஜினி, மம்முட்டி, ஷோபனா, அரவிந்த்சாமி, ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர், பானுப்ரியா
இயக்கம் - மணிரத்னம்
இசை - இளையராஜா
தளபதி படத்தின் பாடல்களை பற்றி சொல்ல வேண்டாம். அது எந்தளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து, உச்சத்தை தொட்டது என்று அனைவரும் அறிவர். ஒரு படத்தை காட்சியாக பார்க்காமல் அதன் ஒலி வடிவத்தை மட்டும் கேட்டு அந்த படத்தின் கதாபாத்திரங்கள், நட்சத்திரங்கள் என அனைவரையும் நம்மை உணர செய்யும் அளவிற்கு ஒரு இசையமை வழங்க முடியும் என்றால் அது இளையராஜாவால் மட்டுமே சாத்தியம். இந்த தளபதி படம் அந்த வகையறாவை சேர்ந்தது. உதாரணத்திற்கு ரஜினி - ஸ்ரீவித்யா, ரஜினி - மம்முட்டி, ரஜினி - அரவிந்த்சாமி, ரஜினி - ஷோபனா ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் இசை வைத்து மட்டுமே இந்த காட்சியில் யார் வருவார்கள் என ஒளி சித்திரத்தை பார்க்காமலே சொல்லிவிட முடியும்.
பாடல்கள் : ராக்கம்மா கையத்தட்டு..., சுந்தரி கண்ணால் ஒரு சேதி..., சின்னத்தாயவள்..., காட்டுக்குயிலு மனசுக்குள்ளே..., புத்தம் புது பூ பூத்ததோ..., யமுனை ஆற்றிலே..., மார்கழிதான் ஓடிப்போச்சு...
இதுபோன்று இளையராஜாவின் இசையில் உங்கள் மனம் கவர்ந்த ஆல்பங்களை (திரைப்படங்கள்) பட்டியலிட்டு கமென்ட் பகுதியில் கருத்து பதிவிடுங்கள்.