'அன்பே டயனா' படத்திற்கு வரவேற்பு: தியேட்டர் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழக முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் ஜூலை 23ல் ரிலீஸ் என்பதால், அதற்கு முந்தைய வாரம் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. பல படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தன. தியேட்டர் கிடைக்காது, எதுக்கு ரிஸ்க் என ஒதுங்கின. ஆனால், பாரி இளவழகன் இயக்கி, நடித்த 'அன்பே டயானா' படம் மட்டும் ரிலீஸ் ஆனது. படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்தாலும், தியேட்டரில் எப்படி ஓடுமோ? ஜனநாயகன் வந்துவிட்டால் 5, 6 நாட்களில் துாக்கிவிடுவார்கள் என பலரும் கணக்கு போட்டார்கள். ஆனால், படத்தின் கதை, கமர்ஷியல் விஷயங்கள், நடிகர்களுக்காக படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
சென்னையில் இன்று 'அன்பே டயானா' படத்தின் நன்றி அறிவிப்பு விழா நடந்தது. அதில் தயாரிப்பாளர் சத்யா என்பவர், மற்ற இணைத்தயாரிப்பாளர் 2 பேருக்கு பிளாட்டினம் செயின் பரிசளித்தார். படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதாக கூறினார். படத்தின் வினியோகஸ்தர்கள் சிலரும் தங்களுக்கு படம் லாபத்தை தந்துள்ளதாக கூறினர். மேலும் படக்குழுவினர் இப்போது அன்பே டயானாவுக்கு தியேட்டர்கள் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 200க்கும் குறைவான தியேட்டரில் படம் ஓடியது. இப்போது 67 தியேட்டர்கள் கூடுதலாக வந்துள்ளது என்றனர்.
இதனால், ஜனநாயகன் படத்தால் இந்த படத்துக்கு, சின்ன படத்துக்கு பாதிப்பில்லை. அதேசமயம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிகிறது. நன்றி அறிவிப்பு விழாவில் பேசிய சிலர் ஜனநாயகனை வம்பு இழுக்க, சிலர் ஜனநாயகனை விட அதிக வசூல் என்ற ரீதியில் பேச, தயாரிப்பாளர்களில் ஒருவரான இரா.சரவணன். 'ஜனநாயகன் படமும் வெற்றி, எங்களுக்கும் வெற்றி, அந்த படத்துக்கும், எங்களுக்கும் எந்த போட்டியும் இல்லை. தமிழக முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். பெரம்பூர் தொகுதி கதை பின்னணியில் வந்த இந்த படமும் வெற்றி பெற்றது' என்று விளக்கினார். இதேபோல் ஜனநாயகன் குழு நன்றி அறிவிப்பு விழா நடத்துமா? படத்தின் வசூல், தியேட்டர் எண்ணிக்கையை சொல்லுமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.