சல்மான்கான் அனுப்பிய லீகல் நோட்டீஸ் ; 'காலா ஹிரண்' இயக்குனர் பதிலடி
கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சல்மான்கான் கருப்பு மான் வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டு, அது தற்போதும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் அந்த மான் வேட்டை வழக்கு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சட்டப் போராட்டங்களின் பின்னணியில் ஹிந்தியில் 'காலா ஹிரண்' என்கிற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பரத் எஸ். ஸ்ரீநாத் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'உதய்பூர் பைல்ஸ்' என்கிற படத்தை இயக்கி பரபரப்பாக பேசப்பட்டவர்.
தற்போது காலா ஹிரண் படத்தை வெளியிடக் கூடாது என்று சல்மான்கான் தரப்பில் இருந்து காலா ஹிரண் படக்குழுவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதே சமயம் படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் கூறும்போது, “சட்ட அழுத்தங்கள் மற்றும் விமர்சனங்கள் எனக்கு புதிது அல்ல. எனது முந்தைய படைப்பான உதய்பூர் பைல்ஸ் தொடர்பாக சந்தித்த சர்ச்சைகள் என்னை மனதளவில் வலுவாக மாற்றியிருக்கின்றன. அந்த அனுபவமே எப்படி போராட வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.
வரும் ஜூன் 20ம் தேதி இந்த படத்தின் முதல் டீசர் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது சல்மான்கான் அனுப்பியுள்ள லீகல் நோட்டீஸ் படத்தின் வெளியீட்டை எந்த விதமாக பாதிக்கும் என்பது வரும் நாட்களில் தான் தெரிய வரும்.