பிளாஷ்பேக்: ஒரு தமிழாசிரியரை தமிழ் திரைப்பட பாடலாசிரியராக்கிய “குடியிருந்த கோயில்”
உயர்ந்த இலக்கியத் தரத்தோடு பாடல்கள் புனையும் வல்லமை கொண்ட நம் தமிழ் திரையிசைப் பாடலாசிரியர்களில் குறிப்பிடும்படியான ஒருவர்தான் புலவர் புலமைப்பித்தன். எம் ஜி ஆர் நடித்து 1968ம் ஆண்டு வெளிவந்த “குடியிருந்த கோயில்” திரைப்படத்தின் மூலமாக ஒரு பாடலாசிரியராக தமிழ் திரைப்பட உலகில் தடம் பதித்து, திரையிசைத் துறையை அலங்கரித்தவர் இவர்.
ஒரு பஞ்சாலையில் இரவு நேரப் பணியாளராக பணிபுரிந்து கொண்டே, பேரூர் தமிழ் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்து பட்டம் பெற்ற இவர், அப்போதே பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி ஆகியவற்றில் பங்கு பெற்று, மேலும் தமிழை நன்கு வளர்த்துக் கொண்டிருந்தார். 1961ம் ஆண்டு புலவர் பட்டத்துடன் திருச்செந்தூருக்கு அருகே உள்ள ஆத்தூர் எனும் சிற்றூரில் ஒரு தமிழாசிரியராக பணிபுரியத் தொடங்கி, பின் கோவையிலுள்ள முனிசிபல் உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராக பணிபுரிந்து வந்தபோது கிடைத்த ஓர் அரிய வாய்ப்புதான் இவரை ஒரு திரைப்படப் பாடலாசிரியராக மாற்றியது.
கோவை ஒண்டிப்புதூரில் “இது சத்தியம்” என்ற திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடனக் குழுவினர் வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் வரவேற்புரை வழங்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார் புலவர் புலமைப்பித்தன். இவரது நல்ல தமிழால் ஈர்க்கப்பட்டு “இது சத்தியம்” திரைப்படத்தின் இயக்குநர் கே சங்கர், இவரை சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்க, அதன்படி புலவர் புலமைப்பித்தனும் சென்னைக்கு விஜயமானார். அப்போது “சைனா டவுன்” என்ற ஹிந்தி திரைப்படத்தை தமிழில் எம் ஜி ஆர் இரட்டை வேடங்களில் நடிக்க “குடியிருந்த கோயில்” என்ற பெயரில் இயக்குநர் கே சங்கர் இயக்கிக் கொண்டிருக்க, அத்திரைப்படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பினைப் பெற்றுத் தந்தார் இயக்குநர் கே சங்கர்.
படத்தில் எம் ஜி ஆர் ஏற்று நடித்திருந்த இரட்டை வேடங்களில், மனநலம் பாதிக்கப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் பாடுவதாக வரும் ஒரு பாடலை எழுதும் வாய்ப்புதான் இவருக்கு வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி, “நான் யார்? நான் யார்? நீ யார்?” என்ற கேள்விக் கனைகளோடு பாடலை ஆரம்பித்து, அற்புதமாக பாடல் முழுதும் எழுதி, வெள்ளித்திரைக்கு விஜயமானார் புலவர் புலமைப்பித்தன்.
எம் ஜி ஆர் பாடலால் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர், எம் ஜி ஆரின் இறுதி திரைப்படமான “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” வரை அவருக்காக ஏராளமான பொருள் பொதிந்த, சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கொண்ட பாடல்களை வழங்கியதன் மூலம் எம் ஜி ஆருக்கு மிக நெருக்கமான பாடலாசிரியர்களில் ஒருவராகவும் உயர்வு பெற்றார் புலவர் புலமைப்பித்தன். நான் யார்? நான் யார்? என ஆரம்பமான இவரது திரையிசைப் பயணம், எம் ஜி ஆர் மற்றும் சிவாஜிகணேசனோடு நின்றுவிடாமல், அடுத்த தலைமுறை நாயகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், விக்ரம் என அடுத்தடுத்த தலைமுறை நடிகர்களுக்கும் தனது தீந்தமிழ் சொற்களால் உயர்ந்த இலக்கியத் தரத்தோடு பாடல்களைத் தந்து, நம் தமிழ் திரையிசையின் தரத்தை மேலும் உயர்த்திக் காட்டியவர்தான் புலவர் புலமைப்பித்தன்.