மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஆர்யா படம் ரிலீஸ்
'உள்ளம் கேட்குமே' படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஆர்யா. ஆனால், 'அறிந்தும் அறியாமலும்' படம்தான் முதலில் வெளியானது. ஆரம்ப கால தடுமாற்றத்திற்குப் பிறகு பாலா இயக்கத்தில் அவர் நடித்து வெளிவந்த 'நான் கடவுள்' படம் திருப்புமுனையைத் தந்தது. அந்தப் படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ஆர்யாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.
அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த படங்களில் 'மதராசப்பட்டிணம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, டெடி' ஆகிய படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது. ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான 'சார்பட்டா பரம்பரை' படம் மீண்டும் 'நான் கடவுள்' அளவுக்கு பெயரைப் பெற்றுத் தந்தது.
அவர் நடித்து கடைசியாக 2023ல் 'காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' படம் வெளிவந்தது. அந்தப் படம் சரியாகப் போகாமல் தோல்வியைத் தழுவியது. சுமார் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஆர்யா நாயகனாக நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்' படம் இந்த வாரம் ஏப்ரல் 17ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் ஆரம்பித்து சுமார் மூன்று வருடங்களாகிவிட்டது.
கவுதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா, ரைசா வில்சன் என மல்டி ஸ்டார் படமாக வெளியாக உள்ளது 'மிஸ்டர் எக்ஸ்'. கோடை விடுமுறையை இந்தப் படம் தான் நல்லவிதமாக ஆரம்பித்து வைக்க வேண்டும்.