'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது
நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படம் சென்சார் பிரச்னையால் ஜனவரி மாதம் வெளியாகாமல் தள்ளிப்போனது. இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காதது, தேர்தல் தேதி அறிவிப்பு உள்ளிட்ட காரணங்களால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் ஜனநாயகன் முழு படமும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சைபர் கிரைம் அலுகலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மேலும் 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இம்மூவரும் ஜனநாயகன் லீக் விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் என்கின்றனர். அதில் ஒருவர் வேறொரு திரைப்படத்தில் உதவி இயக்குனராக இருப்பவராம். அவர் எடிட்டிங் ஸ்டூடியோவில் நுழைந்து, ஜனநாயகன் படத்தை திருடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜனநாயகன் லீக் தொடர்பாக இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை வெளியிட முடியாது என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
தடை
இதற்கிடையே ஜனநாயகன் படத்தை இணையதளங்களில் வெளியிடவும், கேபிள் டிவிக்களில் வெளியிடவும் தடை விதிக்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, படத்துக்கு இன்னும் சென்சார் வழங்கும் முன்பே படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களிலோ கேபிள் டிவிகளிலோ வெளியிட்டால் அது பட தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஜனநாயகன் படத்தை இணையதளங்களிலும் கேபிள் டிவிகளிலும் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 2ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.