பிக் பிட்சர்: தொகுப்பாளர் ஆனார் பரத்
'பிக் பிட்சர்' என்ற நிகழ்ச்சி ஜியோ ஸ்டார் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
தமிழ் பதிப்பை நடிகர் பரத் தொகுத்து வழங்குகிறார். மலையாளத்தில் இந்திரஜித் சுகுமாரன், தெலுங்கில் நவ்தீப், கன்னடத்தில் வசிஷ்டா என். சிம்ஹா மற்றும் இந்தியில் விஜய் ராஸ் ஆகியோர் தொகுப்பாளர்களாக இணைந்துள்ளனர். ஞாயிறுதோறும் 60 நிமிட எபிசோடாக 15 வாரங்கள் வரை ஒளிபரப்பாகும்.
இந்த நிகழ்ச்சி மூலம் பரத் தொகுப்பாளர் ஆகியுள்ளார். நிகழ்ச்சி குறித்து பரத் கூறியதாவது: திறமையும் வாய்ப்பும் ஒன்றாக இணையும் இடமாக 'பிக் பிட்சர்' இருக்கும். திறமை வெளிவர ஒரு சரியான மேடை இது. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே அல்ல. இரண்டு மணி நேரம் நம்மை எல்லாவற்றையும் மறக்கச் செய்து மகிழ்ச்சியாக வைத்திருக்கக்கூடிய ஒரு உலகம் அது.
அந்த சினிமா எப்படி உருவாகிறது, அதன் பின்னணியில் எவ்வளவு உழைப்பு இருக்கிறது, எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் என்பதைக் காட்டும் முயற்சிதான் இந்த நிகழ்ச்சி. அந்த 'மேக்கிங்' செயல்முறையைப் பார்ப்பதன் மூலம் சினிமாவின் உண்மையான சுவாரஸ்யத்தை மக்கள் உணர முடியும்.
அதுவே இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டிய முக்கிய காரணம். நிச்சயமாக நல்ல வரவேற்பு கிடைக்கும். 'பிக் பாஸ்' போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பைப் போலவே இதற்கும் கிடைக்கும். சினிமா உருவாகும் பின்னணியை மக்களுக்கு நேரடியாகக் காட்டுவது இதன் முக்கிய நோக்கம். இவ்வாறு கூறினார்.