ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்! ஐகோர்ட் உத்தரவு
'உஸ்தாத் பகத்சிங்' என்ற தெலுங்கு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது 'நான் ஒரு தெலுங்கு நாயுடு' என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் நடிகர் பார்த்திபன். அதையடுத்து அவரை நோக்கி பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் தனக்கு 'சாதி மதம் அற்றவர்' என்ற சான்றிதழை வழங்க கோரி சென்னையில் உள்ள சோளிங்கநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த மார்ச் 20ம் தேதி விண்ணப்பித்திருந்தார் பார்த்திபன். ஆனால் தேர்தல் பணிகள் காரணமாக அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் பார்த்திபன். அந்த மனு இன்று விசாரணை வந்தது. அப்போது நீதிபதி எம். தண்டபாணி, நடிகர் பார்த்திபனுக்கு சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை ஒரே வாரத்தில் வழங்க வேண்டும் என்று சோளிங்கநல்லூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு அவருக்கு அந்த சான்றிதழ் வழங்கியது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை வருகிற 29ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.