உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்”

பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்”


தேசியவாத சிந்தனையைத் தனது திரைமொழி மூலம் கற்பித்த திறன்மிகு இயக்குநராகப் பார்க்கப்பட்ட ஒரு ஒப்பற்ற திரைக்கலைஞர்தான் இயக்குநர் கே சுப்ரமணியம். இயக்குநர் ராஜா சாண்டோவிடம் சில ஊமைப் படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, பின் “பவளக்கொடி” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ஒரு இயக்குநராக அறியப்பட்டிருந்த இவர், இயக்குநர் ராஜா சாண்டோவைப் போலவே தானும் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் கொள்ள, அதன் விளைவாக வந்த திரைப்படம்தான் “அனந்தசயனம்” என்ற திரைப்படம்.

தனது “மெட்ராஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேஷன்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ், 1942ம் ஆண்டு தயாரித்து, அவரே இயக்கியிருந்த இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தவரும் அவரே. ஒரு அறிமுக நடிகராக தன்னை அடையாளப் படுத்திய இத்திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், படம் வெளிவந்த பின் 'நமக்கு இது சரிவராது' என இயக்குநர் கே சுப்ரமணியத்தையே ஒத்துக் கொள்ளவும் செய்திருந்தது இத்திரைப்படம். “கிருஷ்ணன் தூது”, “மன்மத விஜயம்”, “கச்சதேவயானி” போன்ற திரைப்படங்களில் அதுவரை நடனம் மட்டுமே ஆடிக் கொண்டிருந்த நடிகை வி என் ஜானகிக்கு நடிக்கும் ஓர் அரிய வாய்ப்பை வழங்கிய திரைப்படமாக அமைந்திருந்தது இந்த “அனந்தசயனம்”.

இயக்குநர் கே சுப்ரமணியம், எஸ் டி சுப்புலக்ஷ்மி, எம் வி ராஜம்மா, ஜி பட்டு அய்யர், வி என் ஜானகி ஆகியோர் நடித்து, 1942ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், வசூல் ரீதியாக ஒரு தோல்விப் படமாகத்தான் அமைந்திருந்தது. இந்தியத் திரைப்பட உலகின் முன்னோடியான இயக்குநர் கே சுப்ரமணியத்தின் ஆச்சர்யமிகு திரைத் தோற்றத்திற்காக மட்டுமே இன்றுவரை நினைவு கூறப்பட்டு வரும் ஒரு திரைப்படமாகத்தான் இந்த “அனந்தசயனம்” திரைப்படம் இருந்து வருகின்றது என்பதுதான் உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !