'யூத்' சக்சஸ் மீட் பற்றி குறிப்பிட்டு பேசிய மம்முட்டி
மலையாளத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் மம்முட்டி. அவர் நடித்துள்ள 'பேட்ரியாட்' மலையாளப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய 'யூத்' படத்தின் சக்சஸ் மீட்டில் ஒரு இளம் நடிகர் பேசியதைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.
அப்படத்தில் கென் கருணாஸ் நண்பர்களில் ஒருவராக சின்னா என்ற இளம் நடிகர் நடித்திருந்தார். படத்தின் சக்சஸ் மீட்டில் அவர் உணர்வுபூர்வமாகப் பேசியிருந்தார். அவரது பேச்சு மலையாள நடிகர் மம்முட்டியைக் கவர்ந்துள்ளது.
அதைப் பற்றிக் குறிப்பிட்டு நேற்று மம்முட்டி, “சமீபத்தில், யூத் என்ற படத்தின் வெற்றி விழாவை நான் பார்த்தேன். அதில் பலர் பேசினார்கள். அவர்களில் ஒருவர் உணர்ச்சிபூர்வமான உரையை நிகழ்த்தினார். சினிமாவில் இறுதியாகக் கிடைத்த வாய்ப்புக்காகத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், இருப்பினும் அவரது தந்தை அவரது நடிப்பு வாய்ப்புகளைத் தொடர்வதிலிருந்து தடுத்தார். நடிப்பில் எனக்கும் அவரைப் போலவே அதே அளவு உந்துதலும் ஆர்வமும் உள்ளது” என்றார்.
மம்முட்டியின் அந்த வீடியோவைப் பதிவிட்டு சின்னா, “உண்மையில் எனது நாளை சிறப்பாக்கிவிட்டீர்கள், நன்றி சார்,” என்று தெரிவித்துள்ளார்.
வேறு ஒரு மொழியில் இளம் கலைஞர்கள் உருவாக்கிய ஒரு படத்தின் வெற்றி விழாவைப் பார்த்து அதையும் தனது இன்ஸ்பிரேஷனாகக் கொண்டுள்ளார் மம்முட்டி. அதனால்தான், இத்தனை காலமும் வெற்றிகரமான ஒரு நடிகராக வலம் கொண்டிருக்கிறார்.