'பேட்ரியாட்' படத்தில் சுரேஷ் கோபிக்கு பதிலாக மோகன்லால் வந்தது எப்படி ?
மலையாளத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மல்டி ஸ்டார் படமாக மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா என கலர்புல் நட்சத்திரங்களுடன் உருவாகி இருக்கும் படம் 'பேட்ரியாட்'. இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே 1ம் தேதி வெளியாக இருக்கிறது.
ராணுவ பின்னணியில் உருவாகி இருக்கும் இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் மோகன்லாலின் கதாபாத்திரம் மம்முட்டிக்கு இக்கட்டான சமயத்தில் உதவி செய்வது போல உருவாக்கப்பட்டு இருப்பதும் தெரிந்தது.
அதேசமயம் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் சுரேஷ் கோபியை மனதில் வைத்து தான் இந்த கதையை எழுதினாராம் இயக்குனர் மகேஷ் நாராயணன். ஆனால் மம்முட்டியிடம் இந்த கதையை சொன்னபோது அந்த கதாபாத்திரத்திற்கு மோகன்லால் தான் மிகச் சரியாக இருப்பார் என்று கூறி அவரை சிபாரிசு செய்தாராம் மம்முட்டி. ஆனாலும் மோகன்லாலின் கதாபாத்திரம் இதில் சற்றே நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோல் தான் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.