உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆர் மரணத்தின் பின்னணியில் உருவான படம்

பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆர் மரணத்தின் பின்னணியில் உருவான படம்

விநியோகஸ்தர், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர் கலைப்புலி ஜி சேகரன். ஆரம்பத்தில் கலைப்புலி எஸ் தாணு உடன் இணைந்து பயணித்த இவர் பின்னர் தனியாக பயணித்தார்.

ஊரை தெரிஞ்சுகிட்டேன், 'காவல் பூனைகள், உளவாளி உள்ளிட்ட படங்களை இயக்கிய சேகரன் 'ஜமீன் கோட்டை' படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். இதில் 'காவல் பூனைகள்' படம் எம்ஜிஆர் மரணம் அடைந்ததை பின்னணியாக கொண்டு உருவானது.

அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் எம்ஜிஆர் சிகிச்சை பெற்றதை தழுவி கற்பனை கதையாக இந்த படம் தயாரிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை கொலை செய்து விட்டு, அவருடைய மருமகன் ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதை மக்கள் முறியடிப்பது போன்று கதை உருவாக்கப்பட்டது.

முதலமைச்சரின் கருப்பு பூனைப் படையே, முதல்வரை கொல்ல முயலும். படத்திற்கு முதலில் 'கருப்பு பூனைகள்' என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள். அதற்குத் தடை விதிக்கப்பட்டதால், 'காவல் பூனைகள்' எனப் பெயரை மாற்றினார்கள். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில்தான் மருத்துவமனை காட்சிகள் படமாக்கப்பட்டது.

காவல் பூனைகள் படத்தை தடை செய்ய வேண்டும்' என்று சென்னை நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 1989ம் ஆண்டு படம் வெளியானது. நிழல்கள் ரவி, ராதிகா, பானுசந்தர், ஆகியோர் நடித்தனர். படம் பரபரப்பை கிளப்பினாலும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !