பிளாஷ்பேக் : ஒரே படத்தால் வெளிச்சத்திற்கு வந்த முத்து கிருஷ்ணன்
1950களில் 'வளையாபதி' முத்து கிருஷ்ணன் என்ற நடிகர் சினிமாவில் வலம் வந்தது பற்றி பலருக்கும் தெரியாது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நாடகங்களை ஊர் ஊராக சென்று நடத்தியவர்களில் முக்கியமானவர். அண்ணாதுரையின் நாடகங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
1952ம் ஆண்டு ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான, “வளையாபதி'யை படம் எடுக்க முடிவு செய்தது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை வைத்து வசனம் எழுத ஏற்பாடு செய்தது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க முத்து கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். கதாநாயகியாக சவுகார் ஜானகி நடித்தார். டிஏ ஜெகதீஷ் ஜெயலட்சுமி, ஏ கருணாநிதி, டிபி முத்துலட்சுமி, புளிமுட்டை ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்தனர் மாடர்ன் தியேட்டர் சுந்தரம் இயக்கினார்.
இந்தப் படம் போதிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் இதில் கதாநாயகனாக நடித்த முத்து கிருஷ்ணன் 'வளையாபதி' முத்து கிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார்.
அதன்பிறகு காவேரியின் கணவன் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். 1955ல் வெளிவந்த 'தூக்கு தூக்கி” படத்தில் சிவாஜி கணேசனின் நண்பனாக நடித்தார்.1959ம் ஆண்டில் 'சாரங்கதாரா' என்ற படத்தில் நடித்துள்ளார். 1961ல் வெளிவந்த ”தாயில்லா பிள்ளை” என்ற படத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞன் ஒருவர் உயர் சாதி வகுப்பைச் சார்ந்தவனாக வளர்வதாக சங்கரன் என்ற கதாபாத்திரத்தில் டி .எஸ்.பாலையாவின் மகனாக நடித்திருந்தார். சாரங்கதாரா, மனமுள்ள மறுதாரம், கவலை இல்லா மனிதன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.
இதன் பிறகு சினிமாவில் போதிய வரவேற்பு இல்லாததால் நேரடியாக அரசியலில் குதித்தார். மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆதரவாளராக இருந்தார். மதுரை திமுக மாநாட்டில் நட்சத்திர பேச்சாளராக வளையாபதி முத்துகிருஷ்ணனை எம்ஜிஆர் அறிமுகம் செய்தார்.
அந்த காலத்தில் எம்.ஜி.ஆர், வளையாபதி முத்து கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி, டி.வி. நாராயணசாமி இந்த ஐந்து பேர்களும் அண்ணாதுரைவின் நெருங்கிய வட்டாரத்தில இருந்தனர். ஆனால் அப்போது அவர்கள் கட்சியில் எந்த பதவியும் வகிக்கவில்லை.