உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாடகி ஸ்வாகதாவிற்கு பாலியல் தொல்லை: யார் அந்த இசையமைப்பாளர்?

பாடகி ஸ்வாகதாவிற்கு பாலியல் தொல்லை: யார் அந்த இசையமைப்பாளர்?


பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் பிக்பாஸ் மாயா சகோதரி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ஓர் இசையமைப்பாளர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்து பேசியுள்ளார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பாடகி ஸ்வாகதா பேசியதாவது: என்னிடம் ஒரு முன்னணி தமிழ் இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக தவறாக நடந்தார். அது ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரான், அனிருத், இமான் ஆகியோர் இல்லை. அவரால் தான், சினிமாவே வேண்டாம் என சொல்லி சென்னையில் இருந்து வெளியேறி ரிஷிகேஷில் செட்டில் ஆகிவிட்டேன். 6 வருடமாக துணி வியாபாரம் செய்து வருகிறேன். அந்த
இசையமைப்பாளரின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு கோரஸ் பாடி இருக்கிறேன். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விஷயங்களும் நடந்தது. அதை செய்திருந்தால் இப்போது பெரிய இடத்தில் இருந்திருப்பேன். எனக்கு திறமை இருக்கிறது என முயற்சித்து வாய்ப்பு தேடினேன். நான் சினிமாவில் கஷ்டப்பட்டு பெற்ற இடத்தை விட்டுவிட்டு வர ஒரு இசையமைப்பாளர் தான் காரணம்.

நான் ஒரு கொடூரமான பாலியல் தொல்லைக்கு ஆளான நபர். அந்த இசையமைப்பாளரிடம் இருந்து தப்பித்து தான் ரிஷிகேஷ் வந்துவிட்டேன். இது பற்றி யாருக்கும் தெரியாது. அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை. எனது 9 வருட காதல் பிரேக் அப் ஆனது. அதில் இருந்து மீண்டு வர கஷ்டமாக இருந்தது. அப்போது அந்த இசையமைப்பாளரிடம் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அவர் என்னை கன்ட்ரோல் எடுத்தார். குடும்பம், நண்பர்கள் என எல்லோரிடமும் அறிமுகப்படுத்தினார். ஒரு கட்டத்தில் சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். பணம் இல்லை என்றார். அதே சமயம் அவரது மனைவிக்கு ஐபோன் வாங்கி கொடுக்க கூட என்னிடம் கடன் வாங்கினார்.

ஒரு சொத்து விற்ற பணம் என்னிடம் இருக்கிறது என அவரிடம் சொன்னேன். அந்த பணத்தை சில காரணங்கள் சொல்லி வாங்கிக்கொண்டு வட்டியுடன் தருவதாக கூறினார். அதை வைத்து வீடு, சொகுசு கார் என வாங்கினார். அதே சமயம் சில பாடல்களும் கொடுத்தார். இதை எல்லாம் அவரும் குடும்பமும் சேர்ந்து தான் செய்தார்கள். ஒரு கட்டத்தில் 7 ஆண்டுக்கு முன் ஒரு நாள் ஸ்டுடியோவில் என்னை பலவந்தப்படுத்தி தவறாக நடந்தார். அதை சிசிடிவி கேமராவில் ரெக்கார்டு செய்து கொண்டார்.
வெளியில் செல்ல கூடாது என சிசிடிவி ரெக்கார்டை வைத்து பிளாக்மெயில் செய்தார். எல்லோருக்கும் காட்டிவிடுவேன் என மிரட்டினார். சவுண்ட் ப்ரூப் ரூமில் அது நடந்தது. அங்கே பல ரகசிய கேமரா வைத்து இருந்தார்.

என்னைப்பற்றி தவறான தகவலை பரப்பினார். அவரது மனைவியையும் பேசி ஏமாற்றினார். இது போல பல பெண்களை வீடியோ எடுத்து அவர் பார்த்து கொண்டிருப்பார். அமெரிக்காவில் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் பைல்ஸ் பற்றி பேசுகிறார்கள். அதற்கெல்லாம் ராஜா சென்னையில் இருக்கிறார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால், நான் சவுண்டு கார்டு திருடிவிட்டேன் என பொய்யாக குற்றம் சாட்டுகிறார். போலீசில் புகார் அளிக்க எனக்கு தைரியம் இல்லை.

இதே போல ஒரு பெண்ணிடம் மீண்டும் நடந்து இருக்கிறார். அந்த பெண் எனக்கு மெசேஜ் அனுப்புகிறார். அபார்ஷன் செய்து இருக்கிறார். இதற்கெல்லாம் அவரது மனைவியும் உடந்தையாக இருக்கிறார். இப்படி ஒருவனுக்கு அவார்டுகள் கொடுக்கிறார்கள். மற்றவர்கள் வேலைக்கு அவர் விருது வாங்குகிறார். அவருக்கு பியானோ கூட வாசிக்க தெரியாது.

நான் புகார் அளிக்க தயார் ஆனபோது காலில் விழுந்தார். என்னை அப்படி செய்துவிட்டு அதன்பின் என் வீட்டில் வந்து காலில் விழுந்தார். புகார் கொடுக்க வேண்டாம் என கெஞ்சினார். என் சகோதரி மாயா தான் என்னை காப்பாற்றினார். இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ஸ்வாகதா. ஆனால் அந்த இசையமைப்பாளர் பெயரை குறிப்பிடாததால், கோலிவுட் வட்டாரத்தில் யார் அவர் என்ற விவாதம் கிளம்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !