மீண்டும் வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிட்ட 'கருப்பு'
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கருப்பு'. இப்படம் மே 14ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இசை வெளியீடு மதுரையில் நடைபெற்றது. அதையொட்டி வெளியான போஸ்டர்களில் படத்தின் வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிடவில்லை. தேதி இல்லாமல் மே 2026 வெளியீடு என்று மட்டும் போட்டிருந்தார்கள்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தை அந்தத் தேதியில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அதனால், 'கருப்பு' வெளியீட்டைத் தள்ளி வைக்கிறார்கள் என்ற தகவல் வெளியானது.
இதனிடையே, நேற்று இப்படத்தின் 'கருப்பா கூட வா' என்ற பாடலை வெளியிட்டார்கள். அந்தப் பாடலின் முடிவில் படத்தின் வெளியீட்டுத் தேதியான மே 14 என மீண்டும் இடம் பெற்றுள்ளது. மேலும், அந்தப் பாடலை தனது எக்ஸ் தளத்தில் சூர்யா பகிர்ந்த போதும் அதே வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, படம் மீண்டும் பழைய தேதியிலேயே வெளியாகிறது. மீண்டும் இதை மாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் சூர்யா ரசிகர்கள் இருக்கிறார்கள்.