அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மராத்தி படம் 'ராஜா சிவாஜி'
தமிழில் சில படங்களில் நடித்துள்ள ஜெனிலியா இணைந்து தயாரிக்க அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக் எழுதி நாயகனாக நடித்துள்ள மராத்தி திரைப்படம் 'ராஜா சிவாஜி'. மே 1ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தில் சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், வித்யா பாலன், மகேஷ் மஞ்ரேக்கர், ஜெனிலியா, பர்தீன் கான், பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், பொமன் இரானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
2024ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு ஆரம்பமான படம். மும்பை, சதாரா, வாய், மகாபலேஷ்வர் மற்றும் பல இடங்களில் படமாக்கப்பட்டது. மராத்தியத் திரையுலகத்தில் அதிக பட்ஜெட்டில் படமாகியுள்ள முதல் திரைப்படம். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.
17ம் நூற்றாண்டில் மராத்தியப் பேரரசின் மன்னனாக மாவீரனாக இருந்தவர் சத்திரபதி சிவாஜி மகாராஜா. முகலாயப் பேரரசு, பீஜாப்பூர், அகமது நகர் சுல்தான்களுக்கு எதிராகப் போராடி இந்துக்களின் சுய ஆட்சி என்ற கொள்கையை நிறுவியவர். அவரது கொரில்லா போர் உத்தி இன்னும் உலக வரலாற்றில் புகழப்படும் ஒன்றாக இருக்கிறது. மத சகிப்புத்தன்மைக்கும் பெயர் பெற்றவராக விளங்கியவர். தனது 16 வயதிலேயே போரில் இறங்கி முதல் வெற்றியைப் பெற்றவர். அவரது வாழ்க்கை வரலாற்றுப் படம்தான் 'ராஜா சிவாஜி' ஆக உருவாகி உள்ளது.