மூன்றே மாதங்களில் படத்தை முடித்த 94 வயது இயக்குனர்
தமிழ் சினிமாவில் தங்களைத் தரமான இயக்குனர்கள் என காட்டிக் கொள்ளும் சில இயக்குனர்கள் ஒரு படத்தை ஆரம்பித்தால் அதை எப்போது முடிப்பார்கள் என்றே தெரியாது. அவர்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் கம்பி மீது நடப்பது போன்றுதான் தினம் தினம் நடக்க வேண்டி இருக்கும்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு படத்தை எப்படி இயக்க வேண்டும் என்பதை காட்டியிருக்கிறார் 94 வயது இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். தமிழில் திக்கற்ற பார்வதி, ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ்,” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ்.
அவரது இயக்கத்தில் தெலுங்கில் புதிய படம் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்கள். மூன்றே மாதங்களில் படத்தின் மொத்த வேலையையும் அவர் முடித்துவிட்டார்.
நேற்று அப்படத்திற்கு 'சிங் கீதம்' என்ற பெயரை அறிவித்து படத்தின் டீசரையும் வெளியிட்டுள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஜுன் 11ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.