பிளாஷ்பேக்: அவ்வையார் ஆவதற்கு முன்பே மணிமேகலையான கே.பி.சுந்தராம்பாள்
தமிழில் ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை திரைப்படங்களாக மாறியது. இதில் சிலப்பதிகாரம் பல பெயர்களில் பலமுறை படமாக்கப்பட்டது போன்று மணிமேகலையும் படமாகி உள்ளது. முதல் படம் 1940ம் ஆண்டு மணிமேகலை என்ற பெயரிலேயே வெளியானது.
கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மணிமேகலை புத்த துறவியாகி அட்சயபாத்திரம் கொண்டு மக்களின் பசி தீர்க்கும் கதைதான் மணிமேகலை. கே.பி.சுந்தராம்பாள் அவ்வையாராக நடிப்பதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படத்தில் மணிமேகலையாக நடித்தார். இந்த படம் பல நிதி நெருக்கடிகளில் சிக்கி மிக தாமதமாக வெளியானதும், படம் தோல்வி அடைந்ததும், கே.பி.சுந்தராம்பாள் மணிமேகலையாக நடித்தது அவ்வளவாக தெரியாமல் போனது.
பொம்மன் இராணி இயக்கி இருந்தார், ராமையா திரைக்கதை வசனம் எழுதினர். கொத்தமங்கலம் சீனு, மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜி.ராமநாதன் இசையமைத்தார். இந்த படத்திற்கு 'பாலசன்னியாசினி' என்ற இன்னொரு பெயரும் உண்டு.