வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை
பிரபாஸுடன் 'ஆதிபுருஷ்', தனுஷுடன் 'தேரே இஷ்க் மெய்ன்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன். தற்போது ஹிந்தியில் உருவாகியுள்ள 'காக்டெய்ல் 2' படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். இவருடன் இன்னொரு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 19ல் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பல பேட்டிகளை அளித்து வருகிறார் நடிகை கிர்த்தி சனோன்.
அப்படி ஒரு பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாமல் நுழைந்த நான், ஆரம்பத்தில் பட வாய்ப்புகளுக்காகப் பெரிதும் போராடினேன். 'மிமி' போன்ற படங்கள் எனக்கு அங்கீகாரம் தருவதற்கு முன்பு பலமுறை விரக்தியான நிலைக்குத் தள்ளப்பட்டேன். குறிப்பாகப் பல திரைப்படங்களில் நடிப்பதற்காக நான் இறுதிவரை தேர்வு செய்யப்பட்டு பின்னர் அந்த வாய்ப்புகள் நட்சத்திர வாரிசுகளுக்குக் கைமாறிச் சென்றன.
அந்த வகையில் எனக்கு எதுவும் எளிதாகக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு வாய்ப்பையும் நான் போராடியே பெற்றேன். சினிமா குடும்பத்திலிருந்து வராததால் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையுடனே நான் பயணிக்க வேண்டி இருந்தது என்று கூறியுள்ளார் கிரித்தி சனோன். மேலும் தன்னுடைய சில படங்கள் தோல்வி அடைந்தபோது தான் மிகவும் சோர்ந்து போனதாகவும், ஆனால் அந்தத் தோல்விகள் எத்தகைய கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற தெளிவைத் தனக்குக் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.