உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கருப்பு : முதல்வர் விஜய் அனுமதி தந்த முதல் காட்சியே ரத்து

கருப்பு : முதல்வர் விஜய் அனுமதி தந்த முதல் காட்சியே ரத்து

தமிழ் சினிமாவிலிருந்து மற்றுமொரு கலைஞராக அரசியலுக்குள் நுழைந்து தேர்தலில் வெற்றி வெற்று முதல்வர் ஆகப் பதவியேற்றுள்ளார் நடிகர் விஜய். அவர் தமிழ்த் திரையுலகத்திற்கு நிறைய செய்வார் என்று திரையுலகினர் எதிர்பார்க்கிறார்கள். அதனாலேயே அவர் பதவியேற்றதும் பலரும் வாழ்த்து செய்திகள், நாளிதழ்களில் விளம்பரங்கள் என அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகிறார்கள்.

முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வரும் போது அதிகாலை காட்சிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தன. மூன்று வருடங்களுக்கு முன்பு அஜித் நடித்த 'துணிவு' படத்தின் அதிகாலை காட்சியின் போது இளைஞர் ஒருவர் லாரி மீதிருந்து கீழே விழுந்து அகால மரணமடைந்தார். அதன் பின் முந்தைய திமுக ஆட்சி அதிகாலை காட்சிகளை ரத்து செய்தது. காலை 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது.

விஜய் முதல்வராக வந்த பின் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். அவர் முதல்வராகப் பதவியேற்ற பின் முன்னணி நடிகர் ஒருவரின் படமாக சூர்யா நடித்த 'கருப்பு' படம் இன்று வெளியாகிறது. ஆனால், இப்படத்திற்கு முந்தைய ஆட்சி போலவே 9 மணி காட்சிக்கு மட்டுமே அனுமதி தந்தார்கள்.

அதற்கே தயாரிப்பு நிறுவனம் விஜய்யின் புகைப்படத்துடன் நன்றி போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. ஆனால், முதல்வர் விஜய் அனுமதி தந்த முதல் காட்சியே தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது.

அது குறித்து 'கருப்பு' தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, “தவிர்க்க முடியாத காரணங்களால் காலை 9 மணி காட்சி ரத்து செய்யப்படுகிறது. அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவிற்கு சூர்யா ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !