ஆகஸ்ட் 14ல் சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரிலீஸ்
சூர்யா நடிப்பில் ‛கருப்பு' படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை சூர்யா நடிப்பில் வெளியான படங்களில் இது தான் அதிக வசூலைக் குவித்த படமாக மாறி உள்ளது. இந்நிலையில் இவரின் அடுத்த பட ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடித்துள்ள படம் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா தயாரித்துள்ளனர்.
ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. குடும்ப உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது. குறிப்பாக தன்னை விட அதிக வயது இடைவெளி இருக்கும் சூர்யாவை இளம் பெண்ணான மமிதா காதலிப்பது மாதிரியான கதை இது. தெலுங்கு, தமிழ் ஆகிய இருமொழிகளில் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆக., 14ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.