பழம்பெரும் நடிகரும், சூர்யா, கார்த்தியின் தந்தையுமான சிவக்குமாரும், சத்யராஜும் நேற்று கோவையில் நடந்த ஒரு தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சிவக்குமார் 'மக்களுக்கு அறிவு வந்தால் சினிமா பார்ப்பார்களா?' என்றார். அவரது கருத்து தற்போது பரபரப்பாகி உள்ளது.
அவர் மேலும் கூறும்போது “மாற்றம் என்பது உலகத்தில் தவிர்க்க முடியாத விஷயம். காமராஜரைப்போல ஒரு தலைவரை எங்காவது பார்க்க முடியுமா?. அவரையே தோற்கடித்தார்கள். காமராஜர் வேண்டாம் மாற்றம் வேண்டும் என்று அப்போது மக்கள் நினைத்தார்கள். தற்போது மக்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள்.
மக்களை அதிகம் ஈர்ப்பவர்கள் சினிமாத்துறையை சார்ந்தவர்கள்தான். சினிமா மூலம் கூறுவது மக்களுக்கு நெருக்கமாகிவிடுகிறது. மக்களுக்கு அறியாமை உள்ளவரை அரசியல்வாதிகளும், சினிமா துறையினரும் பிழைத்துக் கொள்வார்கள். மக்களுக்கு அறிவு வந்தால் எதற்கு படம் பார்க்கிறார்கள்?” என்றார்.