தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரவி அரசு
அதர்வா நடித்த 'ஈட்டி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவி அரசு. வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், தொடர்ந்து 'ஐங்கரன்' என்ற படத்தையும் இயக்கினார். விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மகுடம்' படத்தை இயக்கிய அவர், விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் 'பைவ் சீஸ் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இது குறித்து ரவி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 2004ம் ஆண்டில், இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராகச் சேர்ந்து எனது திரைப்படப் பயணத்தைத் தொடங்கினேன். சுமார் 10 ஆண்டுகள் நீடித்த இந்தப் பயணத்தின் போது, அவரது அனுபவமும், கதை சொல்லும் கலையின் மீதான எனது ஆர்வமும் இணைந்து, என்னை ஒரு படைப்பாளியாக வார்த்தெடுத்தன. தற்போது பைவ் சீஸ் பிலிம்ஸ் எனும் பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன்.
இந்த நிறுவனம்,நான் இயக்கும் திரைப்படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் செயல்படும். எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு குறித்த விவரங்களை விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.