'ஏஒடி' படம் பார்த்துவிட்டு சவாலில் தோல்வி : ஒரு லட்சம் கொடுத்த இயக்குனர் சுகுமார்
பவன் சதினேனி இயக்கத்தில், துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'ஆகாசம்லோ ஒக தாரா'. சிறந்த படம் என பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் சுகுமார், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அல்லு அரவிந்த்துக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். 'புஷ்பா 2, ரங்கஸ்தலம்' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சுகுமார். அடுத்து ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் இருக்கிறார்.
அல்லு அரவிந்த்துக்கு ஒரு லட்ச ரூபாயை எதற்காகக் கொடுத்தார் என்பது குறித்து அவரது இன்ஸ்டா தளத்தில், “நேற்று அரவிந்த் சார் தொலைபேசியில் அழைத்து எனக்கு ஒரு சுவாரசியமான சவால் கொடுத்தார்.
ஹே சுகுமார், போய் 'ஏஒடி' படம் பார். படம் பார்த்துவிட்டு நீங்கள் அழாமல் வெளியில் வந்தால் நான் உங்களுக்கு ஒரு கோடி தருகிறேன். அழுதுவிட்டு வந்தால் நீங்கள் எனக்கு ஒரு லட்சம் தர வேண்டும் என்றார்.
எவ்வளவு செலவான சிபாரிசு சார்,” எனக் குறிப்பிட்டு ஒரு லட்ச ரூபாய் கொடுத்ததற்கான செக்கின் நகலையும் பதிவிட்டுள்ளார்.
படம் பார்த்துவிட்டு அழுது கொண்டே வெளியில் வந்து தனது சவாலில் தோற்றுள்ளார் இயக்குனர் சுகுமார்.