உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தமிழில் கவர்ச்சி நடனம் ஆடிய பாலிவுட் குணசித்ர நடிகை

பிளாஷ்பேக் : தமிழில் கவர்ச்சி நடனம் ஆடிய பாலிவுட் குணசித்ர நடிகை

1982ம் ஆண்டில், தனது 20வது வயதில் 'நிக்கா' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அர்ச்சனா புரண் சிங். அதன் பிறகு நசிருதீன் ஷாவுடன் இணைந்து 'ஜல்வா' படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, 'அக்னிபத்', 'சௌதாகர்' 'ஷோலா ஔர் ஷப்னம்', 'ஆஷிக் அவாரா' மற்றும் 'ராஜா ஹிந்துஸ்தானி' உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்தவர் பின்னர் நகைச்சுவை வேடங்களிலும், குணசித்தர வேடங்களிலும் நடித்தார். சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினார். தமிழில் பிரபு, குஷ்பு நடித்த 'நாளைய செய்தி' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். ரஜினி நடித்த 'பாண்டியன்' படத்திலும் ஆடினார். 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் திரிஷாவின் அம்மாவாக நடித்தார். அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்வில்லை.

பின்னாளில் சின்னத்திரையுலகில் பெரிய ஆளுமையாக மாறினார். அர்ச்சனாவின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, 1985 ஆம் ஆண்டில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பப்பட்ட 'மிஸ்டர் யா மிஸ்' என்ற வாராந்திர நகைச்சுவைத் தொடரில் நடித்தார். ஜீ டிவியில் ஒளிபரப்பான 'வா, க்யா சீன் ஹை' நிகழ்ச்சியின் மூலம் அவர் தொலைக்காட்சி தொகுப்பாளரானார், அதைத் தொடர்ந்து 'அன்சென்சர்ட்' நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. பின்னர் அவர் 'ஸ்ரீமான் ஸ்ரீமதி', 'ஜுனூன்' ஆகியவற்றில் நடித்தார் மற்றும் சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சியில் 'அர்ச்சனா டாக்கீஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தற்போது முதுமையின் காரணமாக ஓய்வெடுத்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !