தனுஷ் அரசியலுக்கு வருவாரா இயக்குனர் கஸ்தூரிராஜா சொன்ன பதில்
சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் இயக்குநர் கஸ்தூரிராஜாவிடம் போயஸ் கார்டனில் வசிக்கும் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா? என்று கேட்கப்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; என் மகன்களோ, பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம் என்றார்.
மேலும் ''சென்னையில் மிக பவர்புல்லான இடம் கோபாலபுரம் தான், கருணாநிதி வாழ்ந்த அந்த இடம்தான் ஒளி பிறந்த இடம். வருங்காலத்தில் தனுஷ் மகன் சினிமாவுக்கும் வரலாம். இப்போது மகள் வழி பேரன் நடித்து வருகிறார்'' என்றார். மேலும் அவர் பேசுகையில், ''தனுஷின் நிஜ பெயர் வெங்கடேச பிரபு சினிமாவுக்காக தனுஷ் மாற்றிக் கொண்டார். ஆனால் இப்பொழுது ஏர்போர்ட் உள்ளிட்ட இடங்களில் தனுஷ் கே ராஜா என்று தான் அவரை அழைக்கிறார்கள். என் பேரோடு அவர் பெயரை அழைப்பது எனக்கு பெருமை.
நான் தேனியில் இருந்து சென்னைக்கு வர ஐம்பது ரூபாய் கிடைக்காமல் கஷ்டப்பட்டேன். 19 வயதில் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. மூன்று வயதில் செல்வராகவன் கை குழந்தையாக இருந்தார். அந்த சமயத்தில்தான் என் மனைவி விஜயலட்சுமி ஆதரவுடன் சென்னை வந்து கஷ்டப்பட்டு இயக்குனர் ஆனேன். 'துள்ளுவதோ இளமை' படம் எங்கள் குடும்பத்தை மாற்றியது. கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த செல்வராகவன் சினிமாக்கு வர ஆசைப்பட்ட போது முதலில் படி அப்புறம் சினிமா என்றேன். அவரும் கோல்ட் மெடல் வாங்கி 'காதல் கொண்டேன்' மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் எடுக்க 4 கோடி கடன் வாங்கினேன்.
என் மகள்கள் அண்ணன் படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள். அந்த படத்தின் வெற்றி எங்கள் குடும்ப நிலையை மாற்றியது. என் இரண்டு மகள்களும் டாக்டர்கள். இப்பொழுது சென்னையில் புகழ்பெற்ற டாக்டராக இருக்கிறார்கள். இப்பொழுது என் மகள் வழி பேரன் பவிஷ் நடித்து வருகிறார். இன்னொரு பேரன் உதவி இயக்குனராக இருக்கிறார். நானும் 'ஹபிபீ' படத்தில் நடித்துள்ளேன். இப்பொழுது என் வயது 72. என் படங்கள் வேறு மாதிரி, பட்டிக்காட்டான் படம் எடுத்த மாதிரி இருக்கும். என் வாரிசுகள் படங்கள் வேறு. காதலும் கல்வியும் முக்கியமானது. இப்போது பெண்களும் நிறைய குடிக்கிறார்கள். அனைவரும் கல்வியில் சாதிக்க வேண்டும். கல்விதான் என்னை இந்த நிலைக்கு மாற்றியது. நான் காதல் காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் விட்டவன்'' என்றார்.