நான் உயிருடன் தான் இருக்கிறேன் ; வீடியோ வெளியிட்ட மம்முட்டி பட நாயகி
மலையாளத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி, அதன்பிறகு கடந்த 2015ல் முதல் படத்திலேயே மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் நடிகை ஜுவல் மேரி. தனது இரண்டாவது படத்திலும் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தும் ஆச்சரியப்படுத்தினார். தமிழில் விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை, விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் கடந்த சில தினங்களாகவே ஜுவல் மேரி இறந்துவிட்டார் என்றும், அவருக்கு குரல் போய்விட்டது என்றும், அதனால் தான் படங்களில் நடிக்கவில்லை என்றும் விதவிதமான செய்திகள் சில சமூக வலைதளங்களிலும் இணையதளங்களிலும் வெளியாகின.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை ஜுவல் மேரி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு, ''கடந்த இரண்டு நாட்களாக சிலர் எனக்கு குரல் போய்விட்டது, நான் மரணப் படுக்கையில் இருக்கிறேன் என்பது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். நான் இறக்கவில்லை, உயிருடன் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்..மேலும் தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் அனுபவம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் தான் பகிர்ந்து கொண்டதை வைத்துத்தான் இதுபோன்று வதந்திகளை உருவாக்கி சிலர் பரப்பி வருகிறார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம். அது மட்டும் அல்ல, தயவு செய்து இப்படி வதந்தி பரப்புபவர்கள் அதை நிறுத்த வேண்டும்'' என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.