'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
மலையாளத்தில் கடந்த 2024ம் வருடம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.. சுமார் 20 கோடியில் தயாரான இந்த படம் 230 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. மலையாள திரையுலகின் குணச்சித்திர நடிகரும், கடந்த வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' படத்தில் வில்லனாக நடித்தவருமான சவுபின் சாஹிர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுடன் படத்தையும் தனது நண்பருடன் இணைந்து தயாரித்திருந்தார்.
இந்த பட தயாரிப்பின் போது கேரளாவில் அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் வலியதரா ஹமீது என்பவரை இந்த படத்தில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு 7 கோடி ரூபாய் வாங்கியதாகவும், படம் வெளியானதும் லாபத்தில் 40 சதவீதம் கொடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார்கள். ஆனால் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலித்த பிறகும் கூட தான் கொடுத்த பணத்தையும் தன்னிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. லாபத்தில் பங்கும் கொடுக்காமல் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சவுபின் ஷாஹிர், அவரது தந்தை பாபு ஷாஹிர் மற்றும் நண்பர் ஷான் ஆண்டனி ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில் சுமார் 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதில் முதலீட்டாளரை திட்டமிட்டு ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனே கூட்டுச்சதி மற்றும் மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது என போலீசார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் பட்ஜெட்டில் தயாரிப்பாளர்கள் பொய்யான தகவல்களை கூறியுள்ளார்கள் என்றும், 18.65 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் 22 கோடி செலவானதாக பங்குதாரர்களிடம் பொய்யான தகவல்களை கூறியிருக்கின்றனர் என்றும், தயாரிப்பாளர்கள் என்கிற பெயரில் அவர்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்துள்ளனர் என்றும், அதுவும் கூட மற்றொரு தயாரிப்பாளரான ஷான் ஆண்டனி அந்த தொகையையும் முதலீடு செய்துள்ளார் என்கிற விவரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.