ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் தீஷன், காவ்யா அனில், பாடினி குமார் உட்பட பலர் நடித்த நுாறுசாமி படம் ஜூன் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படம் குறித்து இயக்குனர் சசி கூறியது...
‛‛சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்குபின், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குபின் நான் இயக்கிய இந்த படம் வர இருக்கிறது. நுாறு கோடி வானவில் இன்னமும் வெளியாகவில்லை. ஒரு டாக் ஷோவில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அம்மா, மகன் பேசியதை கேட்டு வியந்தேன், அந்த பாதிப்பில் இந்த கரு உருவானது. நான் இயக்கிய பிச்சைக்காரன் அம்மாவை தெய்வமாக பார்த்தது. இதில் அம்மாவை ஒரு மனுஷியாக பார்க்கிறது. அவர்களுக்கும் உணர்வு இருக்கிறது, தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதை மறந்துவிடுகிறோம் என்பதை சொல்கிறது. படம் பார்க்கும் அனைவரும் தங்கள் குடும்பத்தை சேர்ந்த பல பெண்களை நினைவுப்படுத்தி பார்ப்பார்கள்.
விஜய் ஆண்டனி தயாரித்து, அவரே ஒரு முக்கியமான கேரக்டரில் வருகிறார். அவர் நடிக்காவிட்டால் அந்த கேரக்டரில் சசிகுமார் நடித்து இருப்பார். லப்பர் பந்து பார்த்துவிட்டு கதையின் முக்கிய கேரக்டரான செல்விக்கு ஸ்வாசிகாவை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். அவரும் பக்காவாக செட்டானார். அவரை சுற்றி கதை நகருகிறது. ஸ்வாசிகாவுக்கு விருதுகள், பாராட்டுகள் கிடைக்கும். அவர் நடிக்காவிட்டால் பூ பார்வதியை நடிக்க வைக்கலாம் என முதலில் நினைத்து இருந்தேன்.
விஜய் ஆண்டனி அக்கா மகன் அஜய் தீஷன் முக்கியமான ரோலில் வருகிறார். அவர் ஸ்வாசிகா மூத்தமகனாவும், சோஷியல் மீடியா பிரபலம் சக்தி இன்னொரு மகனாகவும் வருகிறார்கள். வித் லவ் படத்தில் நடித்த காவ்யா அனிலுக்கும் நல்ல ரோல், இதில் பாலாஜி ஸ்ரீராம் என்பவரை இசையமைப்பாளராக ஆக்கியிருக்கிறேன். தெலுங்கில் இந்த படம் வண்டாதேவுலு என்ற பெயரில் வருகிறது. பிச்சைக்காரன் படம் தெலுங்கிலும் பெரிய ஹிட். நுாறுசாமி படமும் தமிழ், தெலுங்கில் வெற்றி பெறும், நிஜ வாழ்க்கையில், சமூகத்தில் நல்ல பாதிப்பை, சில கேள்விகளை எழுப்பும் என நம்புகிறேன்'' என்றார்.