10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ்
தலைவன் தலைவி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள படம் பரிமளா அண்ட் கோ. ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நகைச்சுவையை மையப்படுத்தி இருந்தாலும் கூட ஒரு கொலை, அதை யார் செய்திருப்பார்கள் என்கிற விசாரணை ஆகியவற்றை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கிறது. குடும்பக் கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கி வரும் இயக்குநர் பாண்டிராஜுக்கு இது புதிதல்ல. ஏற்கனவே 2016ல் விஷால் நடிப்பில் இவர் இயக்கிய கதகளி படத்தின் கதையும் கிட்டத்தட்ட இதே போல தான்..
அதிலும் விஷால் குடும்பத்திற்கு எதிரான ஒரு நபர் கொல்லப்பட, அதில் விஷால் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என விசாரணை நடக்கும். கடைசியில் சம்பந்தப்பட்டவரை யார் கொன்றார்கள் என ஒரு சஸ்பென்ஸ் உடையும். அந்த படத்தை முழுக்க முழுக்க சீரியஸான திரில்லராக இயக்கியிருந்த பாண்டிராஜ், கிட்டத்தட்ட அதே பாணியில் இந்த பரிமளா அண்ட் கோ படத்தில் காமெடியை மிக்ஸ் செய்து கொடுக்க முயற்சித்திருக்கிறார்.. ஆனால் இந்த படம் கதகளியாக இல்லாமல் பொய்க்கால் ஆட்டமாக மாறிவிட்டது என்பதுதான் துரதிர்ஷ்டம்.