திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா லாரன்ஸ்? ஜூன் 11ல் முக்கிய அறிவிப்பு
நடிகர் ராகவா லாரன்ஸ், தற்போது 'பென்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வருவதாகவும், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜயின் த.வெ.க சார்பில் போட்டியிட உள்ளார் எனவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ''நான் திருச்சி கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தி பல்வேறு ஊடகங்களில் பரவி வருகிறது. எனது ஊடக நண்பர்கள் அனைவரும் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, இதுகுறித்து விளக்கம் கேட்டு என்னைச் சந்திக்கக் கோரி வருகின்றனர்.
இந்த யூகங்கள் ஒரு கட்டத்தில் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று நான் உணரும் அளவுக்கு வளர்ந்துவிட்டதால், இந்தக் குறிப்பைப் பகிர விரும்புகிறேன். நான் தற்போது 'பென்ஸ்' படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறேன், எனது படப்பிடிப்பு 10ம் தேதியுடன் முடிவடைகிறது. என் தாயின் ஆசீர்வாதங்களுடன், என் வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கிய முடிவு வரும் 11ம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதன் மூலம் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.