வாசகர்கள் கருத்துகள் (1)
இதே படத்தின் கதை தான் கமல்ஹாசன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை ராதிகா கேஆர்விஜயா
நடிகர் சிவாஜி கணேசனின் ஆஸ்தான இயக்குனர்களில் முதலாமவரும், அவரது 'பா' வரிசை வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநருமான ஏ பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் ஏறக்குறைய 18 திரைப்படங்கள் வரை நடித்திருக்கும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஒரு மாபெரும் வெற்றித் திரைக்காவியம்தான் “படிக்காத மேதை”. “ஜோக் பியோக்” என்ற வங்க மொழி திரைப்படத்தை தமிழாக்கம் செய்து, ஒரு தரமான திரைக்காவியமாகத் தந்திருந்தார் இயக்குநர் ஏ பீம்சிங். ஒரு படத்தின் கதைக்கேற்ற கதாபாத்திரங்கள் எவ்வளவு முக்கியம் என்பது “படிக்காத மேதை” திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவராலும் எளிதாக உணர முடியும்.
சிவாஜி கணேசனோடு நடிகை சவுகார் ஜானகி இணைந்து நடித்த முதல் திரைப்படமாக வெளிவந்த படம்தான் இந்த “படிக்காத மேதை”. அன்றைக்கு இருந்த மற்ற கதாநாயகியருடன் ஒப்பிடுகையில் சவுகார் ஜானகி சிவந்த நிறமுடையவர் என்பதைத் தவிர, கவர்ச்சியான தோற்றமுடையவராக இல்லை என்பதே உண்மை. இருப்பினும் இந்த திரைப்படத்தில் சவுகார் ஜானகிதான் சிவாஜிக்கு ஜோடி என்று முடிவு செய்யப்பட, படக்குழுவினரும், மற்றோரும் சவுகார் ஜானகி இந்தக் கதாபாத்திரத்திற்கு சரியானவர் அல்ல. அதற்கான தோற்றமும், கவர்ச்சியும் அவரிடம் இல்லை என்றும், நடிகர் திலகம் சிவாஜியின் முன் அவரால் நிற்கக் கூட முடியாது என்றும் மறுத்துக் கூறிய நிலையில், சிவாஜி மட்டும் சவுகார் ஜானகியின் நடிப்பை நன்கு அறிந்தவர் என்பதால், தனக்கு ஜோடியாக நடிக்கப் போகும் அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு சவுகார் ஜானகிதான் என சொன்னதோடு, படத்தில் ஒரு ஏழைப் பெண்ணாகவும், சாந்தமான நடிப்பை வெளிப்படுத்தும் அந்த வேடத்திற்கு சவுகார் ஜானகிதான் பொருத்தமானவர் என சிவாஜி உறுதிபட கூற, பின் படப்பிடிப்பு தொடங்கியது.
படத்தில் எஸ் வி ரங்காராவ், பி கண்ணாம்பா தம்பதியரின் வீட்டு வேலைக்காரனாக 'ரங்கன்' என்ற கதாபாத்திரத்தில் சிவாஜிகணேசன் நடித்திருந்தார். அந்த வயதான தம்பதியர் தங்களது மற்ற சொந்தப் பிள்ளைகளைப் போலவே ரங்கனையும் வளர்த்து வரும் நிலையில், குடும்பத்தில் பிள்ளைகளால் வரும் நெருக்கடி, அதனால் வரும் துயரங்கள் என அந்த வயதான தம்பதியர் அவதியுறும் போது, அவர்கள் பெற்றெடுக்காத அந்த ரங்கன்தான் அந்தக் குடும்பத்தின் இன்னல்களைப் போக்கி, உயர்நிலை அடையச் செய்கின்றான் என்பதாக செல்லும் இந்தப் படத்தில், உரிமையோடு கூடிய அப்பாவித்தனமான ரங்கன் என்ற அந்தக் கதாபாத்திரத்தில் சிவாஜிகணேசன் நடித்திருந்த பல காட்சிகள் படத்தின் இயக்குநரான ஏ பீம்சிங் மட்டுமின்றி படக்குழவினர் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரையும் கலங்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கும்.
சிவாஜிகணேசன், சவுகார் ஜானகி, எஸ் வி ரங்காராவ், பி கண்ணாம்பா, டி எஸ் துரைராஜ், ஈ வி சரோஜா, டி ஆர் ராமச்சந்திரன், சந்தியா, டி கே பாலச்சந்திரன், எம் எஸ் சுந்தரிபாய், எஸ் ஏ அசோகன், டி பி முத்துலட்சுமி, முத்துராமன், சி ஐ டி சகுந்தலா என ஒரு பெரும் நட்சத்திரத் திரளே நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் கதை வசனத்தை இயக்குநர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன் எழுத, இசையமைத்திருந்தார் திரையிசைத் திலகம் கே வி மகாதேவன். இயக்குநர் ஏ பீம்சிங் இயக்கத்தில் ஜுன் 25, 1960ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் 20 வாரங்களைக் கடந்து ஓடி, வசூல் ரீதியாக ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது. முதன் முதலாக சிவாஜியோடு இணைந்து நடித்த நடிகை சவுகார் ஜானகி இதன் பின்பு ஏராளமான திரைப்படங்களில் அவரது ஜோடியாகவும், துணை நடிகையாகவும் நடித்து, தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகியரில் ஒருவராகவும் உயர்வு பெற்றார்.
இதே படத்தின் கதை தான் கமல்ஹாசன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை ராதிகா கேஆர்விஜயா