அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'நுாறு சாமி' படம் தமிழ், தெலுங்கில் ஜூன் 19ல் வெளியாகிறது. படம் குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில் 'என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் சசி. பிச்சைக்காரன் படத்தின் மூலம் இன்னும் பெரிய நடிகராக மாற்றினார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். அவரின் பார்வை, கதை சொல்லும் விதம் புதிதாக இருக்கிறது.
பிச்சைக்காரன் படம் பார்த்தவர்கள் அம்மாவை கொண்டாடினார்கள். இந்த படத்தை பார்த்தால் பெண்களை பற்றி, அவர்களின் இன்னொரு வாழ்க்கை, உலகம் பற்றி யோசிப்பார்கள். அம்மாவாக ஸ்வாசிகா, அவர் மகனாக, என் மருமகன் அஜய் திஷன் நடித்துள்ளனர். நான் குறைவான நேரத்தில் வந்தாலும் நிறைவான கேரக்டர். கரும்பு வெட்டும் தொழிலாளியாக வருகிறேன். இந்த படத்துக்காக மருமகன் அஜய்க்கு சம்பளம் கொடுக்கவில்லை. இன்னும் சில படங்களில் எங்கள் கம்பெனிக்காக அவர் பண்ணப் போகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரத்தில் பங்கு என்ற அடிப்படையில் நான் சம்பளம் வாங்கினேன். அப்படி வாங்கிய முதல் ஹீரோ நான் தான். இது நல்ல விஷயம், இப்போது சொந்த படங்களில் நடித்து வருகிறேன். முதல்வர் விஜயை சமீபத்தில் சந்தித்தேன். ஒன்றிரண்டு விஷயங்கள் தவிர வேறு அதிகமாக பேசவில்லை. அவருக்கு வாழ்த்து சொன்னேன். தற்போதைய சூழலில் இளைஞர்கள் அதிகம் அரசியல் ஆர்வம் கொண்டுள்ளனர். நான் நடித்த சக்தி திருமகன் நல்ல படம் என நினைக்கிறார்கள். அடுத்து கோடியில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன். அதேப்போல சக்தி திருமகன் சரியான நேரத்தில் தான் வந்தது.
சினிமா, இசை என தொழில் இங்கு உள்ளது என்பதால் தான் நான் சென்னையில் இருக்கிறேன், எனக்கு பிடித்தது எளிமையான வாழ்க்கை முறை தான். கிராமத்தில் ஏழு மணிக்கு மேல் மக்கள் உறங்குவது, அதிகாலையில் கோழி கூவும் முன் எழுந்திருப்பது இதுதான் பிடித்துள்ளது. ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எப்படி தென்காசியில் செட்டில் ஆனாரோ அதேபோன்று மூன்று வருடங்கள் கழித்து பொள்ளாச்சி போன்ற ஒரு பகுதியில் செட்டிலாகிடலாம் என திட்டமிட்டு இருக்கிறேன். ஒரு நல்ல கிராமம் பார்த்து, அதற்கான திட்டம் உள்ளது.
நகரத்தில் உள்ளவர்கள் அழுத்தத்தோடு ஓடுகிறார்கள். கிராமப்புறத்தில் பரபரப்பு கிடையாது, மன அழுத்தம் கிடையாது. இன்னொரு கொரோனா வந்தால் சென்னையில் வாழ முடியாது. கிராமப்புற வாழ்க்கை மேம்பட்டு உள்ளது என புரிந்து கொள்ள வேண்டும். வேலைக்காக மட்டுமே சென்னையில் உள்ளோம். நான், நீங்கள் அனைவரும் விரைவில் கிராமத்திற்கு சென்று விடலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.