உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிமுக.,வில் இருந்து விலகிய நடிகை கவுதமி

அதிமுக.,வில் இருந்து விலகிய நடிகை கவுதமி


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கவுதமி. அவருக்கும் அரசியல் ஆசை வந்து 1997ம் ஆண்டிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் துணை தலைவராகவும் இருந்தார். ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என தீவிர அரசியலில் இருந்தார். 2021ம் ஆண்டுத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பா.ஜ., பொறுப்பாளராகப் பணியாற்றினார். அத்தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிட விருப்பமாக இருந்தார் கவுதமி. ஆனால், அவருக்கு சீட் தரப்படவில்லை.

பின்னர் 2023ல் பா.ஜ.,வில் இருந்து விலகினார். அக்கட்சியில் 25 ஆண்டுகள் பணியாற்றி இருந்தார்.

2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக கட்சியில் இணைந்தார். அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த வருடம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் அதே ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்தார். இந்தக் கட்சியிலும் அவருக்கு சீட் தரப்படவில்லை.

இதனிடையே, இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமூக சேவை செய்ய உள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இனி எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டாரா, அல்லது அதிமுகவில் இருந்து பலரும் விலகி சேர்ந்து வரும் தவெக கட்சியில் சேருவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !