உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அவமானங்களை அடித்தளமிடுங்கள் அடுத்தக்கட்ட முயற்சியை சிந்தியுங்கள்: நம்பிக்கையூட்டும் நந்தினி

அவமானங்களை அடித்தளமிடுங்கள் அடுத்தக்கட்ட முயற்சியை சிந்தியுங்கள்: நம்பிக்கையூட்டும் நந்தினி


மாடலிங், திரைத்துறையில் தனக்கான தனிப்பாதையை உருவாக்கி வரும் மாடலும், நடிகையுமான நந்தினி ஊடகம், விளம்பரத்துறையில் சாதனை படைக்கும் இளம் கலைஞர்.

திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடியை பூர்வீகமாகக் கொண்ட நந்தினி இளம்வயதில் தந்தையை இழந்தார். தாய் ஜெயபிரபாவின் அரவணைப்பில் வளர்ந்தார். சினிமா பின்னணி இல்லாத எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். கிராமப்புற சூழலில் வளர்ந்த அவர் மாடலிங் துறையைத் தேர்ந்தெடுத்தபோது எழுந்த விமர்சனங்களை மீறி இன்று வெற்றியாளராக மின்னுகிறார்.

அவரிடம் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து ...

சிறுவயதிலிருந்து நடனம், போட்டோகிராபி, வீடியோ எடிட்டிங்கில் ஆர்வம். உறவினர் மூலம் துணை நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் காஸ்டிங் டைரக்டர் அறிமுகம் கிடைத்தது. பசங்க- 2, 96 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியவில்லை.

மாடலிங் துறையில் முயற்சித்தேன். நான் உயரம் குறைவு என்பதால் பல இடங்களிலும் என்னை அவமானப்படுத்தினர். எந்த இடத்தில் அவமானப்பட்டேனோ அதே இடத்தில் மாடலிங் இமேஜாக ஜொலிக்க முடிவு செய்தேன்.

சென்னையில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியில் சேர்ந்து எனக்கான முயற்சிகளை தொடர்ந்தேன். வேலை வழியாக கிடைத்த சினிமா நட்புகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு விளம்பரம், போட்டோ ஷூட்களில் நடித்தேன். விளம்பர மாடலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019ல் சிறந்த கலைஞர் விருது, 2020ல் தேசிய தொழில்முறை சாதனையாளர் விருது, 2021ல் கலை, பேஷன் துறையில் சிறந்த கலைஞருக்கான கவுரவ டாக்டர் பட்டம், 2023ல் சிறந்த மாடல் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன. 2024ல் நடிகை நயன்தாராவின் 9 ஸ்கின் நிறுவனம் சார்பில் வளரும் இளம் கலைஞர் விருது கிடைத்தது மறக்க முடியாத அனுபவம்.

மாடலிங்கில் முழு ஈடுபாட்டுடன் சம்பாதிப்பது மனத்திருப்தி அளிக்கிறது. ஆனால் மற்ற திறமைகளுக்கும் மதிப்பளிக்க வீடியோ எடிட்டிங், கவர் சாங் தயாரித்தல், நடிப்பு என பலவழிகளிலும் தடம் பதிக்கிறேன். வொர்க் ப்ரம் ஹோமில் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றுகிறேன்.

சினிமா, மாடலிங் துறையில் அட்ஜஸ்ட்மென்ட், ப்ரீ கொலாப்பரேஷன் என்ற பெயரில் கல்லுாரி பெண்களை சிலர் தவறாக அணுகும் கலாசாரம் ஒழிய வேண்டும் என எண்ணுகிறேன். திரைத்துறையில் திறமை, சரியான கதைகளை வைத்திருந்தும், வெளியில் வர முடியாமல் தவிக்கும் புதிய, தகுதியான கலைஞர்களை ஒன்றிணைத்து எதிர்காலத்தில் சொந்தமாக திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்பதே இறுதி லட்சியம்.

வெற்றி என்பது உறுதி, தன்னம்பிக்கை, துணிச்சல், விடாமுயற்சியால் உருவாக்கப்படுகின்றது. அவமானங்களை அடித்தளமிடுங்கள், அடுத்தக்கட்ட நகர்வை சிந்தியுங்கள், என்றும் வெற்றி உங்களுக்கே சொந்தம். வெற்றி என்பது உறுதி, தன்னம்பிக்கை, துணிச்சல், விடாமுயற்சியால் உருவாக்கப்படுகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !