கன்னட நடிகையின் காதலர் தற்கொலை
கன்னட சினிமாவின் பிரபல நடிகை கிருஷி தபண்டா. அகிரா, காஹி, எரடு கனசு, லங்கே, கனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மாடல் அழகியாக இருந்த இவர் 'மிஸ்.கன்னடா' பட்டம் மூலம் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வைஷாக் என்பவருக்கும், கிருஷிக்கும் நெருக்கமான காதல் இருந்து வந்துள்ளது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த வைஷாக் பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் உள்ள 'அடுக்குமாடி குடியிருப்பில் கிருஷி வீட்டில் தங்கி இருந்தார்.
தொழிலதிபர் ஒருவரை மிரட்டி 7 கோடி ரூபாய் பணம் கேட்ட வழக்கில் வைஷாக் மற்றும் நடிகை கிருஷி ஆகியோர் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் குடும்ப தகராறு காரணமாக வைஷாக் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதற்காக அவர் ஒரு ரிசார்ட்டிசில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென நடிகை கிருஷியை செல்போனில் அழைத்து, 'நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்' என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷி, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, வைஷாக் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருந்தார். இந்த தற்கொலை குறித்து ஆர்.ஆர்.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.