அரசியல் எண்ணம் இல்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா நற்பணி இயக்கம்
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தில் சாதாரண விஷயம். எம் ஜி ஆர் தொடங்கி விஜய் வரை பலரும் அரசியலில் என்ட்ரி ஆகி ஜொலித்து இருக்கிறார்கள். இப்போது தமிழக முதல்வராக விஜய் ஆனப் பின் இன்னும் பல நடிகர்கள் அரசியலுக்கு வர துடிக்கிறார்கள். அதற்காக ஆசைப்பட்டு பல வேலைகளை ரகசியமாக செய்து வருகிறார்கள். அந்தவகையில் அடுத்து சூர்யா அரசியலுக்கு வருகிறார். விரைவில் கட்சி தொடங்கலாம் என கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த அவர் ரசிகர் மன்ற கூட்டத்தில் அரசியல் பேசப்பட்டதுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் ரா.வீரமணி என்பவர் பேசுகையில், ''சூர்யா அரசியலுக்கு வருவார். இங்கு இருப்பவர்கள் வருங்கால எம்.எல்.ஏ, எம்.பி.,கள்'' என சொல்ல கூட்டத்தில் கைத்தட்டல். அந்த வீடியோ வைரலானது.
தனிப்பட்ட கருத்து
இந்த நிலையில், அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட ரா.வீரமணி என்பவர் 'இது என் தனிப்பட்ட கருத்து' என தெளிவாக குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளை பகிரந்துகொண்டார். அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றது. இதனை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம். மேலும், கடந்த 3 ஆண்டுகளாக ரா.வீரமணி என்பவர் மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெளிவிக்கிறோம்.
எண்ணம் இல்லை
அதேபோல், சூர்யாவுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கு சமூக சேவைகளை செய்வதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது.
எனவே, சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல், மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.