பிளாஷ்பேக்: விஜயகாந்த் நாயகனாக நடிப்பதற்கு, கே பாக்யராஜ் பரிந்துரைத்த “கன்னிப்பருவத்திலே”
1970களின் பிற்பகுதியில் இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகத் திரைப்படமான “16 வயதினிலே” திரைப்படத்தில் அவருக்கு உதவியாளராகவும், படத்தில் இரண்டொரு நிமிடமே வந்து செல்லும் ஒரு கிராமத்து வைத்தியர் வேடத்திலும் நடித்து தனது வெள்ளித்திரைப் பிரவேசத்தை ஆரம்பித்தவர்தான் நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ். இதே காலகட்டங்களில் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தவர்தான் நடிகர் விஜயகாந்த். பின்னர் கே பாக்யராஜ் இயக்குநர் பாரதிராஜாவின் “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “நிறம் மாறாத பூக்கள்” போன்ற படங்களில் அவருடைய உதவியாளராகப் பயணித்து, பின் இயக்குநர் பாரதிராஜாவால் அவரது “புதிய வார்ப்புகள்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் உயர்வு பெற்றார்.
1979ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று வெளியான “புதிய வார்ப்புகள்” திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், அதே ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் இயக்குநர் பி வி பாலகுரு இயக்கத்தில், ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட “கன்னிப்பருவத்திலே” என்ற திரைப்படத்தில் திரைக்கதை அமைத்துத் தந்திருந்ததோடு, அதில் வில்லனாகவும் நடித்திருந்தார் கே பாக்யராஜ்.
இந்தப் படத்திற்கான கதாநாயகன் தேர்வு தீவிரமாக நடைபெற்று வந்தபோதுதான், கே பாக்யராஜ் அப்போது சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த விஜயராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் விஜயகாந்தை இந்தப் படத்தின் நாயகன் கதாபாத்திரத்திற்காக தயாரிப்பு தரப்பில் சிபாரிசு செய்திருக்கின்றார். அவர்கள் அதற்கும் முன்பே நடிகர் ராஜேஷை நாயகனாக ஒப்பந்தம் செய்திருந்ததால், அந்தப் படத்தில் விஜயகாந்த் நாயகனாக அறிமுகமாக இருந்த வாய்ப்பு நழுவிச் சென்றது.
மேலும் படத்தில் வில்லனாக நடித்து வந்த வேறொரு நடிகருக்கு கே பாக்யராஜ் நடிப்புப் பயிற்சி அளித்து வந்ததைக் கண்ட படக்குழுவினர், அவரது நடிப்பால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, அந்த நடிகருக்கு பதிலாக நீங்களே அந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து விடுங்கள் என சொல்ல, பின்னர் வேறு வழியின்றி, திரைக்கதாசிரியராக பணியாற்றியதோடு, அந்த வில்லன் கதாபாத்திரத்தையும் கே பாக்யராஜே ஏற்று நடித்திருந்தார்.
படத்தில் அவர் பேசிய வசனங்களும், உடல் மொழியும் அன்றைய ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. 1978ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து, 1979ம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று வெளிவந்தது. தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு தனது “ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்து, சங்கர்-கணேஷ் இசையமைத்து, பி வி பாலகுரு இயக்கியிருந்த இத்திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.