2026, தமிழ் சினிமா அரையாண்டு ரிப்போர்ட் : 118க்கு 6 படங்கள் மட்டுமே லாபம்!
2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகப் படங்கள் வெளிவந்தன. தியேட்டர்களில் 279 படங்கள் வெளியாகின. முதல் ஆறு மாதங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை சுமார் 124. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026ம் ஆண்டில் சுமார் 118 படங்கள் வெளியாகி உள்ளன. எண்ணிக்கையில் சில படங்கள் மட்டுமே குறைவு.
சூர்யாவுக்கு முதல் 300 கோடி
கடந்து போன ஆறு மாதங்களில் டாப் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஆறு மாதங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2', விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' ஆகிய படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன. கமல்ஹாசன், அஜித் ஆகியோர் நடித்து இந்த ஆண்டில் படங்கள் வெளிவர வாய்ப்பில்லை.
மேலே குறிப்பிட்ட டாப் நடிகர்களை அடுத்து, அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களில் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி ஆகியோரது படங்கள் வெளிவந்தன. இவற்றில் சூர்யா நடித்த 'கருப்பு' படம் மட்டுமே 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. இந்த ஆண்டில் தமிழில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல நடிக்க வந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தனது முதல் 300 கோடி வசூலைப் பதிவு செய்துள்ளார் சூர்யா.
சூர்யா நடித்த 'கருப்பு' படம் தந்த வெற்றி எதிர்பாராத வெற்றி. கடந்த வருடமே வெளியாக வேண்டிய படம் அப்படியே தள்ளிப் போய், தள்ளிப் போய் இந்த வருடத்தில் வெளிவந்தது. தமிழகத்தில் மட்டுமே இப்படம் 190 கோடி வசூலைக் குவித்தது. தெலுங்கில் டப்பிங் ஆகி அங்கும் லாபத்தைத் தந்தது.
ஏமாற்றமும்... நஷ்டமும்...
தனுஷ் நடித்து வெளிவந்த 'கர', கார்த்தி நடித்து வெளிவந்த 'வா வாத்தியார்' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'பராசக்தி' படம் 100 கோடி வசூலைக் கடந்தது என்று சொன்னார்கள். ஆனால், வசூல் ரீதியாக இப்படம் நஷ்டத்தைத்தான் கொடுத்துள்ளது.
சிலிர்க்க வைத்த சின்ன படங்கள்
முன்னணி நடிகராக சூர்யாவின் 'கருப்பு' தந்த மாபெரும் வெற்றி ஒரு பக்கம் இருந்தாலும், யாருமே எதிர்பார்க்காத சில சிறிய படங்களின் வெற்றியும் இந்த ஆறு மாதங்களில் அதிகம் கவனிக்க வைத்தது.
விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் திட்டமிட்டபடி ஜனவரி 9 வரவில்லை என்றதும் திடீரென பொங்கல் போட்டியில் குதித்தது 'தலைவர் தம்பி தலைமையில்' படம். இரண்டே வீடுகளைச் சுற்றிச் சுற்றி வந்து போன திரைக்கதை, நகைச்சுவையாக இருந்ததால் இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. ஜீவாவுக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையைப் பெற்றுத் தந்துள்ளது.
அதற்கடுத்து பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த 'வித் லவ்' படம் மற்றுமொரு எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. 2025ல் 'டூரிஸ்ட் பேமிலி' படம் இயக்குனராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். கடந்த ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று. அவர் கதாநாயகனாக அறிமுகமான படம்தான் 'வித் லவ்'. இளம் ரசிகர்களின் வரவேற்பை இந்தப் படம் பெற்றதால் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
கதை தான் ஹீரோ
தமிழ் சினிமாவில் ஒரு சீனியர் நடிகை முதன்மைக் கதாபாத்திரத்தில் அதுவும் 'கிழவி' கதாபாத்திரத்தில் நடித்த ஒரு படம் இப்படி ஓடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு படமாக ராதிகா சரத்குமார் நடித்த 'தாய் கிழவி' படம் அமைந்தது. சினிமாவில் ஹீரோயிசம் தேவையில்லை, கிளாமர் தேவையில்லை, நல்ல கதை இருந்தால் போதும், எந்த வயது கதாபாத்திரமாக இருந்தாலும் அது ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் என்பதை நிரூபித்த ஒரு படம்.
இளம் படைப்பாளிகள் பக்கம் தமிழ் சினிமா திரும்பிவிட்டது என்பதற்கு ஒரு உதாரணம் 'யூத்' படம். கென் கருணாஸ் இயக்குனராக அறிமுகமாகி, கதாநாயகனாகவும் நடித்த படம். படத்தின் தலைப்பைப் போலவே யூத் ரசிகர்களைக் கவர்ந்து வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
தமிழ் சினிமாவில் வந்த புது 'ஜானர்' திரைப்படம் தான் 'பிளாஸ்ட்'. ஒரு குடும்பத்தைச் சுற்றிய ஆக்ஷன் திரைப்படம். அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். அமர்க்களமான திரைக்கதை, அதிரடியான இடைவேளை என இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படமாக அமைந்தது.
விமர்சன ரீதியாக பாராட்டு
வசூல் ரீதியாக வெற்றி என்பது ஒரு பக்கம் இருந்தாலும் திரையுலகினராலும், விமர்சகர்களாலும் சில படங்கள் பாராட்டுக்களைப் பெற்றது. “ஹபீபி, நூறு சாமி” உள்ளிட்ட சில படங்கள் பெரிய வசூலைக் குவிக்கவில்லை என்றாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றன.
வசனங்களே இல்லாமல் விஜய் சேதுபதி நடித்த 'காந்தி டாக்ஸ்' படம் வெளியானது. ஆனால், படத்தை ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்க்கத் தவறிவிட்டார்கள்.
ஏமாற்றிய படங்கள்
ஆர்யா நடித்த 'மிஸ்டர் எக்ஸ்', பரத் நடித்த 'காளிதாஸ் 2', பிரதீப் ரங்கநாதன் நடித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி', உள்ளிட்ட சில படங்கள் எதிர்பார்த்து ஏமாந்த படங்களாக அமைந்தன.
118ல் 6 மட்டுமே லாபம்
இந்த ஆறு மாதங்களில் அதிக வசூலைக் குவித்த படங்களாக 'கருப்பு' படம் 340 கோடிக்கும் மேல், 'தாய் கிழவி' படம் 90 கோடி, 'யூத்' 80 கோடி, 'பிளாஸ்ட்' 75 கோடி, 'தலைவர் தம்பி தலைமையில், வித் லவ்' தலா 40 கோடிக்கும் மேல் என வசூலித்துள்ளன. இந்தப் படங்கள்தான் லாபகரமான படங்களாக அமைந்துள்ளன.
2026ம் ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில் மொத்தமாக சுமார் 118 படங்களின் மூலம் சுமார் 1000 கோடி வசூலாகியுள்ளது. அவற்றிற்கான பட்ஜெட்டும் அதே 1000 கோடி வரை செலவாகி உள்ளது. லாபத்தைத் தந்த படங்கள் என்று சொன்னால் 6 படங்கள் மட்டுமே என்பது மிகமிகக் குறைவான ஒன்று.
1000 கோடி எதிர்பார்ப்பு
அடுத்து வர உள்ள ஆறு மாதங்களில் எப்படியும் 100 படங்களுக்கு மேல் வெளியாகிவிடும். அனைவரது பார்வையும் 'ஜெயிலர் 2, ஜனநாயகன்' ஆகிய படங்களின் மீதுதான் உள்ளது. தமிழ் சினிமா இதுவரையில் 1000 கோடி வசூலைப் பெற்றதில்லை. அதை இந்த இரண்டு படங்கள் பெறுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவற்றைத் தவிர நம்பிக்கையான சில படங்களும் வர உள்ளன.
அதிகப் படங்கள் வருவது பெரிதில்லை, அதிகப் படங்கள் வெற்றி பெறுவதும், வசூலைக் குவிப்பதும்தான் தேவைப்படுகிறது. அது அடுத்த ஆறு மாதங்களில் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் சினிமா காத்திருக்கிறது.
2026 - இதுவரையில் வெளியான படங்கள்...
ஜனவரி 2
அனலி, டியர் ரதி, ஜஸ்டிஸ் பார் ஜெனி, காக்கா, மாமகுடம், த பெட்
ஜனவரி 10
பராசக்தி
ஜனவரி 14
வா வாத்தியார்
ஜனவரி 15
தலைவர் தம்பி தலைமையில்
ஜனவரி 23
திரௌபதி 2, ஹாட்ஸ்பாட் 2 மச், ஜாக்கி, மாயபிம்பம், வங்காள விரிகுடா
ஜனவரி 30
க்ராணி, காந்தி டாக்ஸ், கருப்பு பல்சர், லாக்டவுன், மெல்லிசை, ராட்ட, திரைவி
பிப்ரவரி
பிப்ரவரி 6
கில்லி மாப்பிள்ளை, காதல் கதை சொல்லவா, பாடும் குயிலே, ரெட் லேபிள், வித் லவ், யோகிடா
பிப்ரவரி 13
ட்ரீம் கேர்ள், கா, மை லார்ட், மைலாஞ்சி, பூக்கி, ஸ்வீட்டி நாட்டி கிரேஸி
பிப்ரவரி 20
அறிவான், லவ் சப்ஸ்க்ரைப் ஷேர், எம்ஜி 24, மை டியர் டாலி, சிவ சம்போ
பிப்ரவரி 27
ஆழி, ஏ படம், போர்த் புளோர், தாய் கிழவி
மார்ச்
மார்ச் 6
99/66, செல்லமடா நீ எனக்கு, காதல் ரீசெட் ரிபீட், மூரி, முஸ்தபா முஸ்தபா, ஓ பட்டர்பிளை, வடம், வசூல் மன்னன், யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன்
மார்ச் 13
அந்தோணி, திவ்யா, கெளுத்தி, கெணத்த காணோம், கொலைச் சேவல், போலீஸ் பேமிலி, வெஞ்சென்ஸ், வௌவல்ஸ்
மார்ச் 19
யூத்
மார்ச் 27
ஹாப்பி ராஜ், நீ பார்எவெர், சாத்தான் த டார்க்
ஏப்ரல்
ஏப்ரல் 3
கார்மேனி செல்வம், காளிதாஸ் 2, லீடர், மரகத மாலை, நீளிரா
ஏப்ரல் 10
கெஸ்ட், லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, மனிதன் தெய்வமாகாலாம், தாக்சிலா, டிஎன் 2026
ஏப்ரல் 17
மிஸ்டர் எக்ஸ், புரவியாட்டம், ரூம் பாய்
ஏப்ரல் 24
பேட்டில், பிரேக்பாஸ்ட், கமாண்டாவின் லவ் ஸ்டோரி, பாவக் கூத்து, தீயோர் கூடம்
ஏப்ரல் 30
கர
மே
மே 8
29, டே 11
மே 15
கருப்பு, சட்டென்று மாறுது வானிலை, கரா
மே 22
மதர், பானிபூரி பிரேம்
மே 28
பிளாஸ்ட், சோளக் கொல்லை பொம்மை, பழவெட்டி சேதுராயன்,
மே 29
ஈகோ ராமன்
ஜுன்
ஜுன் 5
அழகான மாமியா, இரட்டையர், பரிமளா அண்ட் கோ, சம்ஹாரம், சன்னிதானம் பிஓ
ஜுன் 12
ஆட்டி, சாருகேசி, டபுள் ஆக்குபன்சி, ஹபீபி, மூன்றாம் கண், நிழல், வள்ளுவன், வருகை பதிவேடு
ஜுன் 19
டார்க் ஜெயன்ட், மக்கள் தலைவா, மனு, நூறுசாமி, பதினென் கீழ் கணக்கு
ஜுன் 26
கான்சிட்டி, அங்கீகாரம், ஹார்ட்டின், அந்தரன், ப்ராமிஸ்