ஏ.வி.எம் ஸ்டூடியோவில் ஒரு புளோர் திருமண மண்டபமானது : இப்போதைக்கு படங்களை தயாரிக்கவும் ஐடியா இல்லையாம்
இந்தியாவில் உள்ள பாரம்பரிய ஸ்டூடியோக்களில் ஒன்று சென்னை வடபழனியில் உள்ள ஏவி.எம்.ஸ்டூடியோ. கடந்த 80 ஆண்டுகளில், 179 படங்களை 6 மொழிகளில் தயாரித்து சாதனை படைத்து இருக்கிறார்கள். பல்வேறு நடிகர்கள், இயக்குனர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 6 முதல்வர் இந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.
பின்னர் நிருபர்களிடம் குகன் கூறுகையில் 'காலத்துக்கு தக்கப்படி மாறிக் கொண்டு இருக்கிறோம். ஏவிஎம்-மின் இந்த புளோரில் பல ஆண்டுகளாக ஏகப்பட்ட படப்பிடிப்பு நடந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் கரன்ட் பில் கட்ட கூட வருமானம் இல்லாமல் போனது. அதனால், அதை மாற்றி வருகிறோம். இந்த சென்டரில் திருமணம் மற்ற நிகழ்ச்சி நடத்தலாம். 179 படங்கள், சீரியஸ், வெப்சீரிஸ் தயாரித்தாலும் இப்போதைக்கு நாங்கள் படங்கள் தயாரிப்பது இல்லை. கதை கேட்பதும் இல்லை. வருங்காலத்தில் மாறலாம்.
எங்கள் நிறுவன படங்களை பல்வேறு நிறுவனங்கள் வாங்கி, அதை பல்வேறு ஓடிடியில் ஒளிபரப்பி வருகிறார்கள். எங்களில் சில படங்களில் ஒரிஜினல் காப்பி இல்லை. ஏவிஎம் மியூசியம் நல்ல முறையில் செயல்படுகிறது. என் அப்பா ஏவிஎம் சரவணன் பெயரில் விருது, வேறு வகை அங்கீகாரம் கொடுப்பது பற்றி அரசு முடிவெடுக்க வேண்டும். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டிஆர் தொடங்கி இப்போதைய முதல்வர் விஜய் வரை அனைவருடனும் ஏவிஎம் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சி' என்றார்.