'டிரைவிங் லைசன்ஸ்' படத்தில் மம்முட்டி நடிக்க மறுத்தது ஏன் ? ; 7 ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் விளக்கம்
மலையாளத்தில் கடந்த 2019ல் பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் வெளியான படம் 'டிரைவிங் லைசென்ஸ்'. மறைந்த 'அய்யப்பனும் கோஷியும்' பட இயக்குனர் சாச்சி எழுதிய கதையை, இயக்குனர் லால் ஜூனியர் (நடிகர் லாலின் மகன்) இயக்கியிருந்தார். ஒரு பிரபல ஹீரோவுக்கும், அவரது அபிமான ரசிகனாக இருந்து பின்னர் ஈகோ காரணமாக அவருக்கு எதிராகவே திரும்பி குடைச்சல் கொடுக்கும் ஒரு ரசிகனுக்கும் நடக்கும் ஈகோ யுத்தத்தை மையப்படுத்தி வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில், இந்த படத்தில் சினிமா ஹீரோ கதாபாத்திரத்தில் பிரித்விராஜுக்கு பதிலாக முதன்முதலில் மம்முட்டியைத்தான் நடிக்க அணுகினேன், ஆனால் அவர் மறுத்துவிட்டார் என்கிற ஒரு புதிய தகவலை தற்போது இயக்குனர் லால் ஜூனியர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, மம்முட்டியிடம் இந்தக் கதாபாத்திரத்தைச் சொன்னபோது, அவர் ஏன் நடிக்க மறுத்துவிட்டார் என்றால், ஒரு திரைப்படத்திற்குள் மற்றொரு சூப்பர் ஸ்டார் கதாபாத்திரம் வரும்போது, அதில் நான் நடிக்கும்போது மக்கள் அந்த பாத்திரத்தை மட்டும் பார்க்காமல் அந்த இடத்திலும் தன்னை மம்முட்டியாகவே பார்ப்பார்கள் என்று அவர் கருதினார். அதனால் தனது கதாபாத்திரம் தனித்துத் தெரியாது என்பதால் நடிக்க மறுத்துவிட்டார். அப்போது மம்முட்டியின் மறுப்பு குறித்து எனக்கு வருத்தம் ஏற்பட்டாலும், மம்முட்டி போன்ற ஒரு மூத்த கலைஞர் தகுந்த காரணம் இல்லாமல் ஒரு கதையை நிராகரிக்க மாட்டார் என இப்போது அந்த முடிவின் பின்னால் உள்ள அவரது முதிர்ச்சியையும் அனுபவத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார் லால் ஜூனியர்.