உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கடும் சிக்கலில் 'ஜனநாயகன்' வினியோகஸ்தர்கள்?

கடும் சிக்கலில் 'ஜனநாயகன்' வினியோகஸ்தர்கள்?

விஜய்யின் கடைசி படமாக உருவான 'ஜனநாயகன்' படம் கடந்த ஆறு மாதங்களாக வெளிவராமல் இருக்கிறது. படத்திற்கான சென்சார் பிரச்னை இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் எனத் தெரிகிறது.

இதனிடையே, இப்படத்தின் தயாரிப்பாளரும், தமிழக அரசின் டில்லி பிரதிநிதியுமான வெங்கட் நாராயணா சமீபத்தில் சென்னை வந்து படத்தின் வினியோகஸ்தர்களை சந்தித்திருக்கிறார்.

அப்போது வினியோகஸ்தர்களிடம், எம்ஜி அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு டிஸ்டிரிபியுசன் அடிப்படையில் புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். முன்பு பேசிய தொகையை அப்படியே முன்பணமாகக் கொடுக்க வேண்டும். படம் ஓடவில்லை என்றால் பணத்தைத் திருப்பித் தருகிறோம் என்றும் கூறி இருக்கிறார். டிஸ்டிரிபியூசனுக்கான கமிஷனாக 8 சதவீதம் மட்டுமே தரமுடியும் என்பதுதான் அவரது பேச்சாக இருந்திருக்கிறது.

ஏற்கெனவே எம்ஜி அடிப்படையில் இப்படத்திற்காக ஜனவரிக்கு முன்பே முன்பணத்தைக் கொடுத்தவர்கள் கடந்த ஆறு மாதங்களில் அதற்குரிய வட்டிகளை கட்டியிருக்கிறார்கள். இப்போது அதற்கான வட்டியாக குறைந்த தொகை மட்டுமே தர முடியும் என்றும் சொல்லப்பட்டதாம்.

இனிமேல், படத்தின் வியாபாரத்தை அவரிடம் நேரடியாகப் பேச முடியாது, அலுவலகத்தில் உள்ள ஒருவர் பேசுவார் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

'ஜனநாயகனை' நம்பி படத்தை முதலீடு செய்தவர்கள் தற்போது முழித்துக் கொண்டிருக்கிறார்கள். 'ஜனநாயக' ரீதியாக முதல்வராகப் பதவி வகிக்கும் முதல்வர் விஜய் இதில் தலையிடுவாரா என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களாம்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !