பான் இந்தியா படத்தில் கோபிசந்த்
தெலுங்கின் முன்னணி ஹீரோக்கள் தங்கள் படங்களை பான் இந்தியா படங்களாக உருவாக்குவதையே விரும்புகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் கோபிசந்த். 'பாரத்வர்ஷா' என்ற பான் இந்தியா வரலாற்று படத்தில் நாயகனாக நடிக்கிறார். தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். ரிது வர்மா நாயகியாக நடிக்கிறார். அனுதீப் இசை அமைக்கிறார். சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தனது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.
படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “புதுமையான கதை சொல்லும் முறையிலும் தொழில்நுட்ப பயன்பாட்டையும் கொண்டு அதிகம் பேசப்படாத ஒரு முக்கியமான அத்தியாயத்தை திரையில் கொண்டு வருகிறோம். உணர்வுப்பூர்வமான கதையம்சத்துடன் கண்ணைக் கவரும் பிரமாண்ட காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன. தனது திரைப்பயணத்தில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் கோபிசந்த் நடித்து, தனது திறமையையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்” என்றார்.