உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இந்தியன் 3' - படப்பிடிப்புக்கு வருவாரா கமல்ஹாசன் ?

'இந்தியன் 3' - படப்பிடிப்புக்கு வருவாரா கமல்ஹாசன் ?


ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' படம் 1996ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றது. அதற்கடுத்து 28 வருட இடைவெளிக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' படம் வெளிவந்தது. ஆனால், முதல் படம் போல அமையாமல், யாருமே எதிர்பார்க்காத விதத்தில், இந்த இரண்டாம் பாகம் படுதோல்வியை சந்தித்தது.

இரண்டாம் பாக முடிவில் மூன்றாம் பாகத்திற்கான சிறிய முன்னோட்டக் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இரண்டாம் பாகம் தந்த தோல்வியால் மூன்றாம் பாகம் வருமா, வராதா என்ற ஒரு சந்தேகம் நிலவி வந்தது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சேனாபதி சகிப்புத் தன்மை இன்றி மீண்டும் வருகிறார், மறு எழுச்சி தொடங்குகிறது. 'இந்தியன் 3 - வார் மோட்' என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள்.

மூன்றாம் பாகத்திற்காக சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என இயக்குனர் ஷங்கர் சொல்ல அதைத் தயாரிப்பு நிறுவனமும் ஆலோசனைக்குப் பிறகு ஏற்றுக் கொண்டது. ஆனால், படத்தின் கதாநாயகன் கமல்ஹாசனிடம் இது குறித்து சொல்லி படப்பிடிப்புக்கான தேதிகளைக் கேட்டிருக்கிறார்கள். அவர் தரப்பிலிருந்து எப்போது வருவார் என்பது குறித்த பதில் இன்னும் வரவில்லையாம்.

கமல்ஹாசன் அடுத்து எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கிராமத்துக் களத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் என்கிறார்கள். கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதியன்று இப்படத்தின் அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

இதன் காரணமாக 'இந்தியன் 3' மறு எழுச்சியில் ஒரு பின்னடைவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !