விஜயுடன் பல படங்கள் 'மிஸ்' ஆனது; சுந்தர் சி பேட்டி
சுந்தர் .சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா நடித்த 'மூக்குத்தி அம்மன் 2' படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதையொட்டி சுந்தர் சி அளித்த பேட்டி: கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படத்திற்காக உழைத்திருக்கிறோம். இது அம்மன் படங்களில் வித்தியாசமானது. தன்னையே காப்பாற்ற நினைக்கும் அம்மன் கதை இது. ஆன்மிகம் மட்டுமல்ல பல்வேறு விஷயங்கள் கதையில் இருக்கிறது. நயன்தாரா மாதிரியான சின்சியரான நடிகைகளுடன் பணிபுரிவது நல்ல விஷயம். நாம் சொல்வதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
வில்லியாக ரெஜினா நடித்திருக்கிறார். யோகி பாபு காமெடி பண்ணுகிறார். என்னுடைய முந்தைய படங்களின் நடித்த மனோபாலாவை இப்போது மிஸ் பண்ணுகிறேன். இந்த படத்தில் கிராபிக்ஸ் ஒர்க் அதிகம். ஏ.ஐ வேலைகள் குறைவு. வருங்காலத்தில் ஏஐ தாக்கம் அதிகம் ஆகலாம். அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து நடித்தார் நயன்தாரா. நானும் ஆத்திகர் தான். பழனி கோயிலுக்கு அடிக்கடி செல்வேன். திரவுபதி அம்மன் என் குலதெய்வம்.
நானும் முதல்வர் விஜயும் பல படங்களில் பணியாற்ற நினைத்தோம். ஆனால் எனக்கு கதை சொல்லத் தெரியாது அவர் முழுக்கதை இருந்தால் தான் நடிக்க வருவார். அதனால் செட் ஆகவில்லை. அவர் நடிக்க வேண்டிய என்னுடைய பல படங்கள் ஹிட் ஆகி உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பது இப்போது சொன்னால் நன்றாக இருக்காது. இந்த படத்தில் குஷ்பு இருக்கிறாரா, அவருடன் இணைந்து நடனம் ஆடியவர் யார் என்பது சஸ்பென்ஸ்.
குஷ்பு நடித்தால் செண்டிமெண்டாக அந்த படம் எனக்கு ஹிட் ஆகும். தமிழக அரசு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி கொடுத்ததற்காக முதல்வருக்கு நன்றி. மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் நடித்த நயன்தாரா, ஊர்வசி இதில் இருக்கிறார்கள்; ஆனால் கதை வேறு. அடுத்து பக்கா காமெடி படம் பண்ண ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.