உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் படத்தை அரசியலாக்க வேண்டாம்: விஷ்ணு விஷால் வேண்டுகோள்

என் படத்தை அரசியலாக்க வேண்டாம்: விஷ்ணு விஷால் வேண்டுகோள்


விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் 'கட்டா குஸ்தி 2' நல்ல வரவேற்பை பெற்றிருப்பதுடன், வசூலையும் குவித்து வருகிறது. இந்த படம் ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் சிறப்பு குழந்தைகளுக்கு தனியாக திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால் பேசியதாவது:

படத்திற்கு எதிராக ஆன்லைன் வன்மம் அதிகமாக இருக்கிறது. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இந்த முறை அதற்கு எதிராக நான் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் களத்தில் நின்றேன், இனிமேலும் நிற்பேன். யாரோ ஒருவரைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தாக்குவது சமூகத்திற்கே நல்லதல்ல.

இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டிருப்பதால் தயவுசெய்து இதை யாரும் அரசியலாக மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை ஒரு சிறந்த தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக மட்டும்தான் பார்க்கிறேன். 13 வருடங்களாக எனக்கு அவர்களுடன் பழக்கம் இருக்கிறது. அவர்களுடனான என்னுடைய அனுபவம் என்பது எப்போதுமே அழகானதாகவும், அன்பானதாகவும், இனிமையானதாகவுமே இருந்திருக்கிறது.

அதனால்தான், இந்தத் திரைப்படத்தை அவர்கள் மூலமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். என் சினிமா வாழ்க்கையில் 13 ஆண்டுகளாக எனக்குத் துணையாக இருந்தவர்களுடன் இணைந்து ஒரு நல்ல திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நினைத்தேன், அதைத்தான் செய்திருக்கிறேன். இதை அனைவரும் பாசிட்டிவாக அணுக வேண்டும் என்று விரும்புகிறேன். திரைப்படமே மிகவும் பாசிட்டிவாக இருப்பதால்தான் குடும்பம் குடும்பமாக வந்து தியேட்டர்களில் கொண்டாடுகிறார்கள். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !